கோப்புப்படம் 
இந்தியா

அரசியலில் இருந்து விலகல்: வி.கே. பாண்டியன் அறிவிப்பு

கிழக்கு நியூஸ்

பிஜு ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி.கே. பாண்டியன் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நவீன் பட்நாயக்கின் தனிச் செயலராக 20 ஆண்டுகளுக்கும் மேல் இருந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே. பாண்டியன். கடந்த 2023-ல் அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கிற்கு பக்கபலமாக இருந்தார்.

ஆனால், நவீன் பட்நாயக் மற்றும் பிஜு ஜனதா தளத்தை எதிர்கொள்ள வி.கே. பாண்டியனைக் குறிவைத்தே பாஜக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரது கட்டுப்பாட்டில் ஒடிஷா செல்ல வேண்டுமா என்ற கருத்தில்தான் பாஜக தொடர்ந்து பிரசாரங்களை மேற்கொண்டது.

வி.கே. பாண்டியன் தன்னுடைய அரசியல் வாரிசு அல்ல என்பதை நவீன் பட்நாயக் தேர்தலுக்கு முன்பு தெளிவுபடுத்தினார். மண்ணின் மைந்தனே ஒடிஷாவை ஆட்சி செய்வார் என வி.கே. பாண்டியனும் தேர்தலுக்கு முன்பு விளக்கமளித்தார்.

இருந்தபோதிலும், தேர்தல் முடிவு பிஜு ஜனதா தளத்துக்கு சாதகமாக அமையவில்லை. 147 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஒடிஷாவில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்றது. மக்களவைத் தேர்தலில் பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில், அரசியலிலிருந்து விலகுவதாக வி.கே. பாண்டியன் அறிவித்துள்ளார்.

காணொளி மூலம் அறிவித்த வி.கே. பாண்டியன், "நவீன் பட்நாயக்கிற்கு உதவுவதற்காகவே நான் அரசியலில் நுழைந்தேன். தற்போது முழு மனதுடன் அரசியலிலிருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். இந்த அரசியல் பயணத்தில் யாரையாவது காயப்படுத்தியிருந்தால், மன்னிக்கவும். எனக்கு எதிரான பிரசாரம் பிஜு ஜனதா தளத் தோல்விக்குக் காரணமாக அமைந்திருந்தால், மன்னிக்கவும். கட்சியிலுள்ள தொண்டர்கள் அனைவரும் உள்பட எல்லோரிடமும் நான் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று பேசியுள்ளார்.

முன்னதாக, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நவீன் பட்நாயக், "நீண்டகாலமாக ஆட்சியிலிருந்த பிறகு தோல்வியடைந்திருக்கிறோம் எனும் பட்சத்தில், மக்களின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒடிஷாவின் 4.5 கோடி மக்களும் என் குடும்பத்தினர்தான். என்னால் முடிந்த வழிகளில் அவர்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன்" என்றார்.

வி.கே. பாண்டியன் குறித்து பேசுகையில், "வி.கே. பாண்டியன் என் அரசியல் வாரிசு அல்ல என்பதை ஒவ்வொரு முறையும் கூறி வருகிறேன். அவர் என் அரசியல் வாரிசு அல்ல என்பதை மீண்டும் கூறுகிறேன். என்னுடைய அரசியல் வாரிசு யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

வி.கே. பாண்டியன் மீதான விமர்சனங்கள் என்னுடைய கவனத்துக்கும் வந்தது. இது துரதிருஷ்டவசமானது. ஓர் அதிகாரியாக இவர் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இரு புயல் பாதிப்புகள் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பின்போது சிறப்பாகவே பாண்டியன் செயல்பட்டார். பிறகு, ஐஏஎஸ் பொறுப்பை ராஜினாமா செய்து என்னுடையக் கட்சியில் இணைந்தார். அவருடைய நேர்மைக்காக அவர் மதிக்கப்பட வேண்டும்" என்றார் நவீன் பட்நாயக்.