ANI
இந்தியா

அரசு நியமனங்களில் தலைமை நீதிபதி எப்படி தலையிட முடியும்?: துணை குடியரசுத் தலைவர்

தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறாததால், இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ராம் அப்பண்ணசாமி

சிபிஐ இயக்குநர் போன்ற பதவிகளுக்கான அரசுரீதியிலான நியமனங்களில் இந்திய தலைமை நீதிபதி எவ்வாறு தலையிட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் வரும் பிப்.18-ல் முடிவடைகிறது. இதன் காரணமாக, புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்தெடுக்க பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு விரைவில் கூடுகிறது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் பதவிகளுக்கு தகுதியுடைய நபர்களை பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழு குடியரசுத் தலைவரிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று கடந்த மார்ச் 2023-ல் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக புதிய சட்டத்தை டிசம்பர் 2023-ல் இயற்றியது நாடாளுமன்றம். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் பதவிக்கான நபர்களை பிரதமர், மத்திய சட்ட அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட மூன்று நபர்கள் குழு, குடியரசுத் தலைவரிடம் பரிந்துரைக்க இந்த சட்டம் வழிவகை செய்தது.

தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறாததால், இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், அரசுரீதியிலான நியமனங்களில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பங்களிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார் துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர். மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜெக்தீப் தன்கர் கூறியதாவது,

`நீதித்துறையின் செயல்பாடு மற்றும் அத்துமீறல் ஆகியவற்றுக்கு இடையேயான கோடு மிகவும் மெல்லியதாக உள்ளது. ஆனால் அதனால் ஜனநாயகத்தின் மீது ஏற்படும் தாக்கம் தடிமனாக இருக்கிறது. அதேநேரம் அந்த மெல்லிய கோடு ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையில் உள்ளது.

நம் நாட்டில் அல்லது எந்த ஒரு ஜனநாயகத்திலும், சி.பி.ஐ. இயக்குநரை தேர்வு செய்வதில் தலைமை நீதிபதி பங்கேற்கலாம் என்பதில் சட்டப்பூர்வ காரணம் ஏதேனும் உள்ளதா? இதை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. நிச்சயமாக இதை ஜனநாயகத்துடன் ஈடுபடுத்த முடியாது. எந்தவொரு அரசுரீதியிலான நியமனத்திலும் தலைமை நீதிபதியை எப்படி ஈடுபடுத்தலாம்?’ என்றார்.