இந்தியா

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: கேள்வி, பதில்கள்! | Vice President Election |

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், இண்டியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்கள்.

கிழக்கு நியூஸ்

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குத் தேர்தல் தொடங்கவுள்ளது.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஏன்?

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜூலை 21 அன்று அறிவித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் யார்?

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மஹாராஷ்டிர ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இவர் 1998 மற்றும் 1999-ல் கோவையிலிருந்து மக்களவைக்குத் தேர்வானார். ஜூலை 31, 2024 முதல் மஹாராஷ்டிர ஆளுநராக இருந்து வருகிறார்.

இண்டியா கூட்டணியின் வேட்பாளர் யார்?

இண்டியா கூட்டணி சார்பில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ள சுதர்சன் ரெட்டி, ஜூலை 2011-ல் ஓய்வுபெற்றார். நக்சல்களுக்கு எதிரானப் போரில் பழங்குடியினரைப் பயன்படுத்த முற்பட்ட சத்தீஸ்கர் அரசின் முடிவை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனத் தீர்ப்பளித்தார். இவர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

தேர்தல் நேரம்

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. காலை 10 மணிக்குத் தொடங்கும் தேர்தலில் முதல் வாக்காளராக பிரதமர் நரேந்திர மோடி வாக்களிக்கிறார்.

மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் மாலை 5 மணி வரை வாக்களிக்கவுள்ளார்கள்.

வாக்கு எண்ணிக்கை

அனைவரும் வாக்களித்த பிறகு, மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

உறுப்பினர்கள் பலம்

மாநிலங்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக மொத்தம் 233 பேர் உள்ளார்கள். 12 பேர் நியமன உறுப்பினர்களாக உள்ளார்கள். மாநிலங்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக 543 பேர் உள்ளார்கள்.

காலியிடங்கள் எத்தனை?

இதில் மாநிலங்களவையில் தற்போது 5 இடங்கள் காலியாக உள்ளன. மக்களவையில் ஓர் இடம் காலியாக உள்ளது.

பெரும்பான்மை யாருக்கு?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்களவையிலுள்ள 542 உறுப்பினர்களில் 293 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில் 240 உறுப்பினர்களில் 129 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 786 உறுப்பினர்களில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற 394 வாக்குகள் தேவை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 422 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரே குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.

தேர்தலைப் புறக்கணிக்கும் இரு முக்கியக் கட்சிகள்

பாரத ராஷ்ட்ர சமிதி மற்றும் பிஜு ஜனதா தளம் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்காளிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. பிஜு ஜனதா தளத்துக்கு 7 உறுப்பினர்கள் மற்றும் பாரத ராஷ்ட்ர சமிதிக்கு 4 உறுப்பினர்கள் உள்ளார்கள். இரு கட்சிகளின் மொத்த உறுப்பினர்களும் மாநிலங்களவையைச் சேர்ந்தவர்கள்.

Vice President Election | Jagdeep Dhankar | CP Radhakrishnan | Sudershan Reddy | Sudarshan Reddy | NDA Candidate | INDIA Alliance candidate |