குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணியின் பொது வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி நிறுத்தப்படுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று (ஆக. 19) அறிவித்துள்ளார்.
மேலும் பேசிய கார்கே, `நடைபெறவிருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஒரு சித்தாந்தப் போர். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் நிற்கின்றன. ஜனநாயக மதிப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன’ என்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்பதற்கு முன்பு, கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் ரெட்டி பணியாற்றியுள்ளார். கடந்த 2011-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் பணி ஓய்வு பெற்றார்.
இந்தியா டுடே ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள சுதர்ஷன் ரெட்டி, `தேசிய ஜனநாயக கூட்டணி உள்பட அனைத்துக் கட்சிகளும் என்னை ஆதரிக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.
நடைபெறவிருக்கும் தேர்தல் குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்திய ரெட்டி, இந்தியாவின் 60% மக்களை அவர் பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்தார்.