ANI
இந்தியா

'வைப்ரண்ட் குஜராத்' முதலீட்டாளர் மாநாட்டில் குவியும் முதலீடுகள்

பத்ரி

தமிழகத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சமீபத்தில் நடந்துமுடிந்தது. அதேபோன்ற மாநாடு தற்போது குஜராத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு வைப்ரண்ட் குஜராத் என்று பெயர்.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மட்டுமின்று பிரதமர் நரேந்திர மோதியும் இம்மாநாட்டில் நேரடியாகக் கலந்துகொள்கிறார். மேலும் முதன்மை விருந்தினராக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் ஜாயேத் அல் நஹ்யான் கலந்துகொள்கிறார். செக் குடியரசின் பிரதமர் பீட்டர் ஃபியாலா, மொசாம்பிக் அதிபர் ஃபிலிபே ஜசிண்டோ நியூசி, டிமோர்-லெஸ்டே அதிபர் ஹோசே ராமோஸ் ஹோர்தா ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

தமிழகத்தில் நிகழ்ந்தது போலவே இங்கும் பல்வேறு பெருநிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடுகளைக் கொண்டுவருவதாகச் சொல்லியிருக்கின்றன. இதுவரை பல்வேறு நிறுவனங்கள் 10.31 லட்சம் கோடி ரூபாய்களை முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் போடப்பட்டிருப்பதாகத் தகவல் வந்துள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான அதானி தாம் மட்டுமே அடுத்த சில ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு குஜராத்தில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார். டாடா நிறுவனத்தின் சேர்மன் சந்திரசேகர், ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி ஆகியோர் மிகப்பெரும் முதலீடுகளைச் செய்யப்போவதாகச் சொல்கின்றனர். டாடா நிறுவனம் செமிகண்டக்டர் ஆலையை விரைவில் நிறுவப்போவதாகச் சொல்லியுள்ளது. ஆர்செலார் மிட்டல் நிறுவனத்தின் லக்ஷ்மி மிட்டல், உலகிலேயே மிகப்பெரிய இரும்பு உருக்காலையை குஜராத்தில் நிறுவப்போவதாகச் சொல்லியுள்ளார்.

தமிழகம் போலவே குஜராத்திலும் சொல்வது என்ன, செயலாவது என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.