இந்தியா

நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி!

இந்த விழாவில் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் 17 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் பங்கேற்றனர்.

ராம் அப்பண்ணசாமி

பீஹார் மாநிலத்தில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தில் 1900 இருக்கைகளுடன் கூடிய 40 வகுப்பறைகளும், 300 இருக்கைகளுடன் கூடிய 2 அரங்கங்களும் உள்ளன. வளாகத்துக்குள் 550 மாணவர்கள் தங்கும் அளவுக்கான விடுதி கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தப் புதிய வளாகத்தில் சோலார் மின் சக்தி நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு மையம், நீர் நிலைகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பல வசதிகள் உள்ளன.

`நம் கல்வித்துறைக்கு இன்று மிகச் சிறந்த நாள். நம்முடைய புகழ்பெற்ற கடந்த காலத்துடன் நாளந்தாவுக்கு வலுவான பிணைப்பு உள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் நிச்சயமாக மிக நீண்ட காலம் இளைஞர்களின் கல்வித்தேவையை பூர்த்தி செய்யும்’ எனத் தன் எக்ஸ் தளத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் குறித்துப் பிரதமர் மோடி இன்று காலை பதிவிட்டார்.

இந்த விழாவில் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் 17 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் பங்கேற்றனர். இந்தியா மற்றும் 16 கிழக்கு ஆசிய மாநாடு அமைப்பு நாடுகளின் கூட்டு முயற்சியில் 2010-ல் செயல்பாட்டுக்கு வந்தது நாளந்தா பல்கலைக்கழகம்.

இந்த நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு அருகே சிதிலமடைந்த நிலையில் பழைய `நாளந்தா விஹாரம்’ உள்ளது. கி.பி 5-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரை பண்டைய இந்தியாவின் தன்னிகற்ற கல்வி நிலையமாக விளங்கியது நாளந்தா விஹாரம். இந்த நாளந்தா விஹாரம் குப்தர்கள் காலத்தில் நிறுவப்பட்டு, அந்தப் பகுதியில் பௌத்த மதப் பரவலில் பெரும் பங்கு வகித்தது.