கோப்புப்படம் 
இந்தியா

தில்லியில் மிகவும் மோசமான காற்றின் தரம்: 2-ம் கட்ட மாசு கட்டுப்பாடு அறிவுறுத்தல் | Delhi Air Pollution |

தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் வெடித்ததால் காற்றின் தரத்தில் பாதிப்பு...

கிழக்கு நியூஸ்

தில்லியில் காற்று மாசு அளவு மோசமான நிலையில் உள்ளதால் இரண்டாம் மட்ட மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தில்லியில் காற்றில் கலந்த மாசின் அளவு நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கண்காணிக்கும் வகையில் தில்லி முழுவதும் 38 கண்காணிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதனால் காற்றின் மாசு மோசமான நிலை வரை செல்ல வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டது.

காற்று மாசு தரக் குறியீட்டப் பொறுத்தளவில், காற்றில் மாசின் அளவு 0-50க்கு இடையில் இருப்பது நல்லது. 51-100க்கு இடையில் இருப்பது திருப்திகரமானது. 101-200க்குள் இருப்பது மிதமானது. 202-300க்குள் இருந்தால் மோசமானது. 301-400க்குள் இருந்தால் மிகவும் மோசமானது. 400-ஐ கடந்தால் கடுமையானது என்று கருதப்படுகிறது.

இதனால் தில்லியில் தீபாவளியை முன்னிட்டு பசுமைப் பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்திருந்தது. மேலும் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் தீபாவளிக்கு முந்தைய நாள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே வெடிகள் வெடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

நேற்று மாலை, தில்லியில் காற்று மாசு தரக் குறியீடு 302 ஆகப் பதிவாகியிருந்தது. இது தீபாவளி நாள் அன்று அதிகரிக்கும் என்றும் அஞ்சப்பட்டது. தில்லியில் உள்ள 12 நிலையங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் பதிவானது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பலர் நேற்றிரவு முதல் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினர். அதனால் காற்றில் மாசின் அளவு அதிகரித்தது. இன்றைய காலை நிலவரப்படி காற்று மாசு தரக் குறியீட்டில் 335 ஆகப் பதிவானது. இதையடுத்து இரண்டாம் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி தூசு அதிகமாகக் காணப்படும் சாலைகளில் செயற்கை மழை மூலம் காற்றில் தூசு பரவுவதைக் கட்டுப்படுத்துவது, கூடுதல் மின்சார பேருந்துகளை இயக்குதல், மக்களை பொது போக்குவரத்து பயன்படுத்த அறிவுறுத்துவது உள்ளிட்டவை அடங்கும்.