வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய கீதமான ஜன கன மன பாடலுக்கு இணையாக வந்தே மாதரம் பாடலுக்கும் பாதுகாப்பு வழங்கும் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்த்தது ஏன்? சட்ட வல்லுநர்களின் கருத்து என்ன? வந்தே மாதரம் பாடலின் வரலாறு என்ன போன்றவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
‘வந்தே மாதரம்’ பாடலின் கதை
வங்கமொழி எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பிரபலமாக இருந்த God save the Queen என்ற பாடலுக்கு இணையானதாக இந்தியத் தாயைப் புகழ்ந்து சமஸ்கிருத சொற்களுடன் இயைந்த பாடலாக எழுதினார். 1870-களிலேயே இப்பாடல் எழுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் எழுதி, 1882-ல் வெளியான ஆனந்த மடம் என்ற நூலில் இப்பாடல் இடம்பெற்றது. இந்தியாவைப் பெண் தெய்வமாக உருவகப்படுத்தி சாதுக்கள் பாடும் பாடலாக இது அந்நூலில் வருகிறது. இப்பாடலின் முதல் இரு சொற்களான ‘வந்தே மாதரம்’ என்பது தாய் மண்ணைப் போற்றுவோம் என்ற பொருளில் வருவதால் விடுதலைப் போராட்ட காலத்தில் மிக முக்கியமான முழக்கமாக எழுந்தது.
1896-ல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூர் இதைப் பாடியதன் மூலம் இது தேசிய அளவில் பரவலாக அறியப்பட்டது. அதன்பிறகே நாடு முழுவதும் ‘வந்தே மாதரம்’ என்ற வாசகம் முழு வீரியத்துடன் பரவியது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான பல்வேறு இயக்கங்களில் இந்தப் பாடல் ஒலித்தது. இதன் மூலம் இந்திய தேசிய உணர்வின் முக்கியச் சின்னமாக அது உருவெடுத்தது.
1947-ல் இந்தியா விடுதலை அடைந்த பிறகு, ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ஜன கண மன பாடலை இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேசிய கீதமாக 1950 ஜனவரி 24 அன்று அரசியலமைப்பு நிர்ணய சபை அறிவித்தது. அதே நாளில் வந்தே மாதரம் பாடலுக்கும் சிறப்பு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தேசிய கீதத்திற்கு இணையான மரியாதை வந்தே மாதரம் பாடலுக்கு வழங்கப்பட இந்திய அரசியலமைப்பில் தனியான சட்டப்பூர்வ வரையறை வழங்கப்படவில்லை. பொதுவாக அரசியல், பண்பாட்டு நடைமுறைகளில் வந்தே மாதரம் தேசியப் பாடல் என்று குறிப்பிடப்படுகிறது.
மத்திய அரசின் நடைமுறை
தேசிய கீதம் மற்றும் தேசியக் கொடி தொடர்பான மரியாதை நடைமுறைகள் Prevention of Insults to National Honour Act, 1971 என்ற சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. இந்திய அரசியலமைப்பின் Article 51A(a)-ன்படி, தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்துவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகள், தேசியக் கொடி ஏற்றுதல், ராணுவ மரியாதை நிகழ்வுகள் மற்றும் முக்கிய அரசு விழாக்களில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. முழுமையான தேசிய கீதத்தின் கால அளவு 52 வினாடிகள்; சுருக்கப்பட்ட வடிவம் சுமார் 20 வினாடிகள்.
மாநிலங்களின் நடைமுறை
இந்திய அரசியலமைப்பில், சட்டமன்றக் கூட்டத் தொடக்கத்தில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்ற தனிப்பட்ட விதி இல்லை. ஒவ்வொரு மாநிலமும் தங்களது மரபுகளின்படி நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன. சில மாநிலங்களில் கூட்டத் தொடக்கத்தில் "வந்தே மாதரம்" இசைக்கப்பட்டு, நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக சட்டப்பேரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. புதுச்சேரியில் தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் இணைந்து இடம்பெறும் நடைமுறையும் உள்ளது. மேற்கு வங்கம், நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காலத்திற்கேற்ப நடைமுறைகள் மாறியுள்ளன.
வந்தே மாதரம் சட்டம் என்ன சொல்கிறது?
இந்நிலையில், வந்தே மாதரம் பாடலுக்கும் தேசிய கீதத்திற்கு வழங்கப்படும் அதே மரியாதை அந்தஸ்தை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026 என்ற இந்தச் சட்டதிருத்த மசோதா, கடந்த ஜூலை 29 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமாக அமலுக்கு வந்தால், தேசியப் பாடலை வேண்டுமென்றே அவமதிப்பது அல்லது அதன் பாடலைத் தடுக்க முயற்சிப்பது குற்றமாகக் கருதப்படும். ஏற்கெனவே உள்ள விதிகளில், இச்சட்டத் திருத்த மசோதா சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, Prevention of Insults to National Honour Act, 1971 என்ற சட்டம் தேசியக் கொடி, அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதமான ஜன கண மன ஆகியவற்றுக்கு எதிரான அவமதிப்பை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதுகிறது. ஆனால், தேசியப் பாடலான வந்தே மாதரம் இதுவரை இந்தச் சட்டத்தின் பாதுகாப்பு வரம்புக்குள் இல்லை. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த திருத்த மசோதா மூலம், 'வந்தே மாதரம்' பாடலையும் தேசிய கீதத்துக்கு இணையான சட்டப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வர அரசு முன்வந்துள்ளது. அதன்படி, 'வந்தே மாதரம்' பாடப்படுவதை வேண்டுமென்றே தடுத்தாலோ, பாடல் நடைபெறும் நிகழ்ச்சியை குழப்பினாலோ, தேசியப் பாடலை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டாலோ அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
மத்திய அரசின் விளக்கம்
மத்திய அரசின் விளக்கப்படி, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் 'வந்தே மாதரம்' முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. விடுதலைப் போராட்ட காலத்தில் இந்தப் பாடல் தேசிய உணர்வைத் தூண்டியதாகவும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளித்ததாகவும் அரசு கூறுகிறது. எனவே தேசியக் கொடி, தேசிய கீதம் போன்றே தேசியப் பாடலுக்கும் சட்ட ரீதியான மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதே மசோதாவின் நோக்கம் என விளக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?
இந்தச் சட்ட திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தேசிய உணர்வை சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்த முடியாது, ஏற்கனவே தேசியப் பாடலுக்கு சமூக மரியாதை உள்ளது, புதிய சட்டம் தேவையற்ற குற்றவியல் வழக்குகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று அவர்கள் வாதிட்டனர். அதன்பின் மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு மத்தியிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அடுத்தபடியாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் சட்டமன்ற நடைமுறைகளின் அடுத்த கட்டங்களை நிறைவு செய்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகே சட்டமாக அமலுக்கு வரும். அதன் பின்னரே 'வந்தே மாதரம்' தேசிய கீதத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்புக்கு இணையான பாதுகாப்பைப் பெறும்.
சட்ட நிபுணர்களின் கருத்து
சட்ட நிபுணர்களின் கருத்துப்படி, இந்த மசோதா தேசியச் சின்னங்களின் சட்டப் பாதுகாப்பை விரிவுபடுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், ‘அவமதிப்பு’, ‘இடையூறு’ போன்ற சொற்களுக்கு எந்த அளவிலான விளக்கம் வழங்கப்படும் என்பது எதிர்கால நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம் தெளிவாகலாம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், கருத்துச் சுதந்திரம் மற்றும் தேசிய மரியாதை ஆகிய இரண்டுக்கும் இடையிலான சமநிலையைப் பேணுவது நீதித்துறைக்கு ஒரு முக்கிய சவாலாக இருக்கும் என்றும் சில அரசியலமைப்புச் சட்ட ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
2026-ஆம் ஆண்டு 'வந்தே மாதரம்' பாடல் உருவான 150-ஆம் ஆண்டு நினைவு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு இதை தேசிய மரியாதையை வலுப்படுத்தும் நடவடிக்கையாக விளக்குகிறது. மறுபுறம், எதிர்க்கட்சிகள் இதை அரசியல் நோக்கமுள்ள நடவடிக்கையாக விமர்சிக்கின்றன. இதனால் இந்த மசோதா சட்ட ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
Rajya Sabha passed a bill extending legal protection to Vande Mataram. Deliberate insults or disruption may bring up to three years' jail, fueling free speech debate. amid Opposition protests. in 2026