ஜம்மு காஷ்மீரில் உள்ள உலகின் மிக உயரிய செனாப் ரயில் பாலத்தில் நடைபெற்ற வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிபெற்றது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜம்மு, காஷ்மீர் என இரு பிராந்தியங்கள் உள்ளன. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து செல்லும் ரயில்கள் ஜம்மு பகுதியின் கட்ரா வரை செல்வதற்கு மட்டுமே உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தன. அதேநேரம், காஷ்மீரின் ஸ்ரீநகர் பள்ளத்தாக்குப் பகுதிக்குள் மட்டும் பயணிக்கும் வகையில் டெமு ரயில் சேவைகள் உள்ளன.
இந்நிலையில், ஜம்முவின் கட்ராவையும் ஸ்ரீநகரின் பனிஹாலையும் இணைக்கும் வகையில், ரியசி மாவட்டத்தில் ஓடும் செனாப் நதிக்கு மேலே சுமார் 359 அடி உயரத்தில் ஒரு வழி ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2012-ல் தொடங்கப்பட்டது. அண்மையில் இந்த ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்றன.
இதற்கிடையே செனாப் ரயில் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று திட்டமிடப்பட்டது. இந்நிலையில், ஜம்முவின் கட்ராவில் தொடங்கி ஸ்ரீநகர் வரை வெற்றிகரமாக இயக்கப்பட்டது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில். குளிர்காலங்களில் ஸ்ரீநகரில் நிலவும் தட்பவெப்ப சூழலையும், பனிப்பொழிவையும் கருத்தில்கொண்டு இந்த வந்தே பாரத் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து ஜம்மு பகுதியை வந்தடைய சாலைப் போக்குவரத்து மட்டுமே இதுவரை பயன்பாட்டில் இருந்து வந்தது. செனாப் ரயில் பாலத்தின் பயன்பாட்டிற்கு வருவது மூலம், இனி எளிய முறையில் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்கு பொதுமக்கள் சென்றடையலாம்.