உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்திலிருந்து குப்தகாஷிக்குச் சென்ற ஹெலிகாப்டர் காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இந்த விபத்து குறித்து உத்தரகண்ட் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் சார்பில், "இன்று அதிகாலை 5.20 மணியளவில் கேதார்நாத்திலிருந்து குப்தகாஷிக்குச் சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் கௌரிகண்ட் என்ற பகுதிக்கு அருகே விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதில் 6 பயணிகள் (ஒரு குழந்தை உள்பட) மற்றும் விமானி இருந்தார்கள். ஹெலிகாப்டரில் உயிரிழந்த பயணிகள் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மீட்புப் பணியை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ஆர்யன் ஏவியேஷனை சேர்ந்தது. ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் மறு உத்தரவு வரும் வரை ஹெலிகாப்டர் சேவையானது நிறுத்தப்பட்டது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரகண்டில் ஹெலிகாப்டர் சேவை செயல்பாடுகள் குறித்து நிலையான செயல்பாட்டு நடைமுறையைத் தயாரிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தயாரிக்க தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட குழுவை அமைக்குமாறு தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.
விமான விபத்து விசாரணை அமைப்பு விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளவுள்ளது.