தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, விசா கோரி விண்ணப்பிப்பவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்திய அனைத்து சமூக ஊடக பயனர் பெயர்களை விண்ணப்பங்களில் பட்டியலிட வேண்டும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 26 அன்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், `டிஎஸ்-160 விசா விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்தும் விண்ணப்பதாரர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு தளத்தின் சமூக ஊடக பயனர் பெயர்கள் அல்லது சமூக ஊடகப் பக்கங்களைக் குறிப்பிடவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், `விண்ணப்பதாரர்கள் கையொப்பமிட்டு தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முன்பு அதில் உள்ள தகவல்கள் உண்மையானவை மற்றும் சரியானவை என்று சான்றளிக்கவேண்டும். சமூக ஊடகத் தகவல்களை (விசா விண்ணப்பத்தில்) தவிர்ப்பது விசா மறுப்புக்கும், எதிர்காத்தில் விசாக்கள் பெறும் தகுதியை ரத்து செய்யவும் வழிவகுக்கும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
புது தில்லியில் நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் சந்திப்பில், இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், `இந்திய குடிமக்களின் அனைத்து விசா விண்ணப்பங்களும் தகுதியின் அடிப்படையிலேயே கருத்தில்கொள்ளப்படவேண்டும்’ என்றார்.
அமெரிக்காவில் கல்வி பயில ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் விசா கோரி விண்ணப்பிக்கின்றனர்.
அவர்களின் சமூக வலைதளக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அது குறித்து அதிகாரபூர்வமாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.