இந்தியா

பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜாவின் தேர்ச்சி ரத்து: யூபிஎஸ்சி அறிவிப்பு

ராம் அப்பண்ணசாமி

சர்ச்சைக்குள்ளான பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜாவின் தேர்ச்சியை ரத்து செய்ய நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது யூபிஎஸ்சி.

2022-ல் நடந்த அகில இந்திய குடிமை பணி தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது மராட்டிய மாநிலத்தில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார் பூஜா கேத்கர். இவர் சட்டவிரோதமாக ஓபிசி சான்றிதழையும், மாற்றுத் திறனாளி சான்றிதழையும் சமர்ப்பித்து குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை அடுத்து ஜூலை 16-ல் மாவட்ட பயிற்சியில் இருந்து மராட்டிய மாநில அரசால் விடுவிக்கப்பட்டார் பூஜா. மேலும் ஜூலை 23-க்குள் உத்தரகண்ட் மாநிலம் முசோரியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்குத் திரும்ப அவருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் பூஜா கேத்கர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து யூபிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

`2022-ல் நடந்த அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற பூஜா மனோரமா திலீப் கேத்கார் என்ற நபர் மீது விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில், தன் பெயரையும், தந்தை, தாய் ஆகியோரின் பெயர்களையும், தன் புகைப்படம், கையெழுத்து, கைபேசி எண், முகவரி ஆகியவற்றை மாற்றி, சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைகளை மீறி சட்டவிரோதமாக குடிமைப் பணி தேர்வில் பூஜா கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதனால் பூஜா கேத்கார் மீது கிரிமினல் வழக்கு தொடர காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2022 அகில இந்திய குடிமைப் பணி தேர்வு விதிகளின் படி, 2022 தேர்வில் பூஜா தேர்ச்சி பெற்றதை ரத்து செய்யவும், வருங்காலத்தில் யூபிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் அவர் கலந்து கொள்ளத் தடை விதிக்கவும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது'.