ANI
இந்தியா

மாணவர்களின் தொடர் போராட்டத்துக்குப் பணிந்த உ.பி. அரசு!

மாணவர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ராம் அப்பண்ணசாமி

மாணவர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, முதல்நிலை தேர்வை ஒரே நாளில் நடத்த ஒப்புக்கொண்டது உத்தர பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

220 காலி இடங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த மாநில கீழ்நிலை பணிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த அக்.27-ல் நடைபெறுவதாக இருந்தது. அதன்பிறகு இந்தத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு டிசம்பர் 7, 8 என இரு தேதிகளில், நான்கு ஷிஃப்டுகளாக நடைபெறும் என உத்தர பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முடிவை எதிர்த்த போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் அம்மாநில மாணவர்கள், இந்தத் தேர்வை இரண்டு நாட்களில் நடத்தினால் அது தேவையில்லாத குழப்பங்களுக்கும், சிரமங்களுக்கும் வழிவகுக்கும் எனக் கூறி, முதல்நிலை தேர்வை ஒரே நாளில் ஒரே ஷிஃப்டில் நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் மாணவர்களின் கோரிக்கை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஏற்கப்படவில்லை. இதை அடுத்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அம்மாநிலத்தின் பிரயாக்ராஜில் அமைந்துள்ள அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு வெளியே கடந்த 4 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் மாணவர்கள்.

மாணவர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு வெளியே தடுப்புகளை அமைத்து நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கு ஆதரவை தெரிவித்திருந்த எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநில அரசைக் கடுமையாக சாடியிருந்தார்.

இந்நிலையில், உ.பி. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் அசோக் குமார் இன்று (நவ.14) மாலை, தேர்வாணைய கட்டடத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள் மத்தியில், `ஒருங்கிணைந்த மாநில கீழ்நிலை பணிகளுக்கான முதல்நிலை தேர்வு ஒரே நாளில் ஒரே ஷிஃப்டில் நடைபெறும்’ என்றார்.