கல்லூரிகளிலும் மூன்று மொழிகள் கட்டாயம்: யுஜிசி உத்தரவு  
இந்தியா

உயர்க்கல்வி நிறுவனங்களில் மூன்று மொழிகள் கட்டாயம்: யுஜிசி உத்தரவு | UGC |

பன்மொழித் தன்மையை ஊக்குவிக்கும் தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சம் நிறைவேற்றப்படும்...

கிழக்கு நியூஸ்

கல்லூரிகளிலும் மூன்று மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளிட்ட உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மனியக் குழு புதிய வழிகாட்டு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதில் குறிப்பாக மாணவர்கள் தங்கள் தாய் மொழி அல்லது தாங்கள் வசிக்கும் மாநிலத்தின் மொழி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளோடு மூன்றாவதாக ஒரு மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் குறைந்தது மூன்று மொழிகளுக்கான படிப்புகளை வழங்க வேண்டும். அதில் ஒன்று உள்ளூர் மொழியாக இருக்க வேண்டும், மற்றொன்று அட்டவணைப்படுத்தப்பட்ட 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். இந்த உத்தரவு மாநிலப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களையும் ஒரு இந்திய மொழியை கற்க ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் இந்தியாவின் பன்மொழித் தன்மையை ஊக்குவிக்கும் தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சம் நிறைவேற்றபடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய மொழிப் பாடத்திட்டங்கள், அடிப்படை, இடைநிலை மற்றும் உயர்நிலை என மூன்று நிலைகளில் நெகிழ்வுத் தன்மையுடன் கற்பிக்கப்பட வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கையின்படி பள்ளிகளில் மூன்று மொழிகளைக் கட்டாயமாக்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு நிலவிவரும் சூழலில், உயர்கல்வி நிறுவனங்களிலும் மும்மொழி கற்பிக்கும் திட்டத்தால் கல்வித் துறையில் சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.