இந்தியாவில் ஊரடங்கு வர வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் விளக்கம் ANI
இந்தியா

இந்தியாவில் ஊரடங்கு வர வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் விளக்கம் | Lockdown | Energy Emergency |

நெருக்கடி காலங்களில், நாம் அமைதியாகவும், பொறுப்புடனும், ஒன்றுபட்டும் இருப்பது முக்கியம்....

கிழக்கு நியூஸ்

இந்தியாவில் ஊரடங்கு வர வாய்ப்பில்லை என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 23 அன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, “போர் உலகில் உருவாக்கியுள்ள கடினமான சூழ்நிலைகள் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, நாம் தயாராக இருக்க வேண்டும்; ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். கொரோனா காலத்தில் நாம் ஒற்றுமையுடன் சவால்களை எதிர்கொண்டோம்; இப்போதும் அதேபோல் தயாராக இருக்க வேண்டும்.” என்று பேசியிருந்தார்.

பிலிபைன்ஸில் எரிசக்தி அவசரநிலை

இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா காலத்தைப் போலவே ஊரடங்கு அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்தது. மேலும், போர் காரணமாக நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டால், பிலிப்பைன்ஸில் எரிசக்தி அவசரநிலையைக் கடந்த மார்ச் 25 அன்று பிரகடனப்படுத்தியது. தனது எண்ணெய் தேவைகளில் 98% வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் தட்டுப்பாடு காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு வர வாய்ப்பில்லை

இதன் காரணமாகவும் ஊரடங்கு குறித்த வதந்திகள் நிலவி வந்த நிலையில், இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

“உலக நிலைமை தொடர்ந்து மாறுபாடுகளுடன் உள்ளது, மேலும் நாங்கள் எரிசக்தி, விநியோகச் சங்கிலிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான வளர்ச்சிகளை நிகழ்நேர அடிப்படையில் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பிரதமர் மோடியின் தலைமையில், நமது குடிமக்களுக்கு எரிபொருள், எரிசக்தி மற்றும் பிற முக்கிய விநியோகங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து அவசிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. எழும் சவால்களைச் சமாளிக்க நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம். உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு எதிர்கொள்ளும் போது இந்தியா தொடர்ந்து தனது திறன் மற்றும் வலிமையை நிரூபித்து வருகிறது. மேலும் தொடர்ந்து சரியான நேரத்தில், முன்னெச்சரிக்கையுடன் ஒருங்கிணைந்த முறையில் நாம் செயல்படுவோம். இந்தியாவில் ஊரடங்கு வரும் என்ற வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என்பதைத் தெளிவாகக் கூறுகிறேன். ஊரடங்கை அறிவிக்கும் எந்த திட்டமும் இந்திய அரசிடம் பரிசீலனையில் இல்லை. இத்தகைய நெருக்கடி காலங்களில், நாம் அமைதியாகவும், பொறுப்புடனும், ஒன்றுபட்டும் இருப்பது முக்கியம். இத்தகைய சூழ்நிலையில் வதந்திகளைப் பரப்பி பீதியை உருவாக்க முயல்வது பொறுப்பற்ற, தீங்கு விளைவிக்கும் செயல்” என்று பதிவிட்டுள்ளார்.

Union Minister of Petroleum and Power Hardeep Singh Puri has categorically stated that there is no possibility of a lockdown in India.