பிஹார் மாநிலம் லக்கிசாராயில் தேர்தல் பரப்புரை செய்த உள்துறை அமைச்சர் அமித் ஷா 
இந்தியா

மோடியை இழிவுபடுத்திய ராகுலின் கூட்டணி துடைத்து அகற்றப்படும்: அமித் ஷா எச்சரிக்கை | Bihar Election |

பிரதமர் மோடியை மட்டுமன்றி சத் பூஜையின் தெய்வத்தையும் ராகுல் இழிவுபடுத்தியுள்ளார்...

கிழக்கு நியூஸ்

பிரதமர் மோடியை இழிவுபடுத்திய ராகுல் காந்தியின் கூட்டணி பிஹார் தேர்தலில் துடைத்து அகற்றப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரித்தார்.

பிஹார் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 அன்று நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் தலைமையிலான இண்டியா (மகாகட்பந்தன்) கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகியவை பிரதானமாகக் களத்தில் உள்ளன.

இதையடுத்து பிஹாரில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமர் மோடி பிஹாரில் பிரசாரத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், நேற்று (அக்.29) இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதையடுத்து பிஹாரில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, லக்கிசாராய் பகுதியில் நடந்த பாஜக பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

“நேற்று ராகுல் காந்தி பிஹாருக்கு வந்து பிரதமர் மோடியைத் தகாத வார்த்தைகளால் தரக்குறைவாகப் பேசினார். அப்போது அவர் மோடியை மட்டுமன்றி சத் பூஜைக்கு உரிய தெய்வத்தையும் இழிவுபடுத்தினார். ராகுல் அவர்களே! உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் சத் பூஜையின் தெய்வத்தின் மீது நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் முக்கியத்துவம் புரியாது. நீங்கள் பிரதமர் மோடிக்கு எதிராக இழிவான சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள். வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். பிரதமர் மோடியை எப்போதெல்லாம் காங்கிரஸார் இழிவுப்படுத்திப் பேசுகிறார்களோ, அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி துடைத்து அகற்றப்பட்டுள்ளது. உங்கள் கட்சியினர் மோடியின் தாயாரைக் இழிவுபடுத்தினார்கள். நீங்கள் மோடியையும் சத் பூஜையின் தெய்வத்தையும் இழிவுபடுத்துகிறீர்கள். நவம்பர் 14 அன்று வாக்குப்பெட்டிகள் திறக்கப்படும்போது உங்கள் பிரமாண்ட கூட்டணி துடைத்து அகற்றப்படும்.

பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் நம் நாடு நக்சல்கள் இல்லாத, பயங்கரவாதம் இல்லாத, ஊழல் இல்லாத நாடாக இருக்கிறது. லக்கிசாராய் மக்களின் ஒவ்வொரு வாக்கும் தாமரை மற்றும் அம்புச் சின்னத்திற்கும் அளிக்கப்பட வேண்டும்” என்றார்.

Union Home Minister Amit Shah said that Rahul Gandhi used abusive language against PM Modi and that when the boxes are opened on November 14, their (Grand) Alliance will be wiped out, during his campaign in Lakhisarai, Bihar.