இன்று (அக்.07) தில்லியில் தொடங்கிய உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பகுதிக்கான 77-வது அமர்வில் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டா தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார்.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பகுதிக்கான 77-வது அமர்வு இன்று (அக்.07) தொடங்கி அக்.09 வரை தில்லியில் நடைபெறுகிறது. இதில் வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான், இந்தியா, தென் கொரியா, இந்தொனேசியா, மாலத்தீவு, மியான்மர், தாய்லாந்து, திமோர் லெஸ்தே ஆகிய நாடுகளின் சுகாதார அமைச்சர்களும், பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.
உலகின் நான்கில் ஒரு பங்கு மக்கள் தொகை (சுமார் 200 கோடி) இந்த 11 நாடுகளில் உள்ளது. இந்த நாடுகள் சந்தித்து வரும், மக்கள் தொகை பெருக்கம், அதிகரிக்கும் தொற்று நோய் பாதிப்புகள், தொடர்ந்து உயரும் காசநோய் பாதிப்பு போன்ற சவால்கள் குறித்து இந்த அமர்வில் விவாதிக்கப்பட இருக்கின்றன.
உலக சுகாதார அமைப்பின் இந்த அமர்வின் தலைவராக மத்திய சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் ஜெ.பி. நட்டா தேர்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அமர்வில் பேசிய நட்டா, `சுகாதாரம் எல்லைகளைக் கடந்தது, இதற்கென முழுமையான கூட்டு அணுகுமுறைகள் தேவை. ஒவ்வொருவரின் வெற்றிகளையும், சிக்கல்களையும் கற்றுக்கொள்வதன் மூலம் சுகாதார அமைப்பின் கட்டமைப்பை நாம் பலப்படுத்தலாம்’ என்றார்.
தென்கிழக்காசிய பிராந்தியத்துக்கென பிரத்யேகமான சுகாதார தொலைநோக்குத் திட்டத்தின் அவசியம் குறித்து இந்த அமர்வில் பேசினார் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய இயக்குநர் சைமா வஸீத்.