மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை மத்திய அரசு விடுவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளுக்குத் தேவையான நிதியை மாநில அரசுகள் பெறும் வகையில் மத்திய அரசு மாதம்தோறும் 10-ம் நாள் அன்று மாதாந்திர வரிப்பகிர்வை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், தற்போது மாதத்தின் 1-ம் நாளான இன்று, மத்திய அரசு வழக்கமாக வெளியிடும் அளவுடன் சேர்த்துக் கூடுதல் நிதியை விடுவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, மாநில அரசுகளின் செலவினங்களை விரைவுபடுத்தவும், வளர்ச்சி/நலன் திட்டங்களுக்குப் நிதியளிக்கவும், மத்திய அரசு வழக்கமாக அக்டோபர் 10 அன்று வழங்கப்பட வேண்டிய மாதாந்திர அதிகாரப் பகிர்வுடன் கூடுதலாக ரூ. 1,01,603 கோடியை அக்டோபர் 1-ல் வெளியிட்டுள்ளது.”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன் எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு வரிப் பகிர்வு என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ.4 ,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்திரப் பிரதேசம் ரூ. 18,227 கோடியும் பிஹார் ரூ. 10,219 கோடியும் பெற்றுள்ளன. குறைந்தபட்சமாக ரூ. 392 கோடி கோவாவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியைக் கொண்டு மாநில அரசுகள் வளர்ச்சிப் பணிகள், நலத்திட்ட உதவிகள், சாலை, பாலம், கல்வி, சுகாதார வசதிகள் போன்ற முக்கியத் திட்டங்களுக்கு உடனடியாக நிதியை ஒதுக்க முடியும். குறிப்பாக, பண்டிகைக் காலத்தில் மக்களின் சந்தைச் செலவு மற்றும் நுகர்வோர் தேவைகள் அதிகரிக்கும் என்பதால், மாநிலங்களின் நிதிச்சுமையைக் குறைத்து, நலத்திட்டங்களை விரைவில் நிறைவேற்றும் வகையில் இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.