உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் (கோப்புப்படம்) 
இந்தியா

என் அமர்வைத் தவிர்க்கும் மத்திய அரசு: தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் | CJI BR Gavai |

"நீதிமன்றத்துடன் விளையாடும் உத்தியை மத்திய அரசு கையிலெடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை."

கிழக்கு நியூஸ்

தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டம் தொடர்புடைய வழக்கில் தனது தலைமையிலான அமர்வைத் தவிர்க்க மத்திய அரசு முயற்சிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் குற்றம்சாட்டியுள்ளார்.

தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதா இல்லையா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுக்க உள்ள வெவ்வேறு தீர்ப்பாயங்களுக்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஒரே மாதிரியான விதிகளை விதிக்க தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டம் வழிவகுக்கிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு இதை விசாரிக்கிறது. மனுதாரர்களின் வாதங்கள் அனைத்தையும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கேட்டது. சர்வதேச தீர்ப்பாயத்தில் பங்கேற்க வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி வைத்த கோரிக்கைக்கு இணங்க வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது தான், தனது தலைமையிலான அமர்வைத் தவிர்க்க மத்திய அரசு முயற்சிப்பதாக தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விமர்சித்தார். இதற்கிடையே, இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றக்கோரி மத்திய அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறியதாவது:

"மத்திய அரசு இப்படியொரு நிலைப்பாட்டை எடுத்து நீதிமன்றத்துடன் விளையாடும் உத்தியைக் கையிலெடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மனுதாரர்கள் மற்றும் மற்றவருடைய வாதங்களைக் கேட்டுள்ளோம். மத்திய அரசு இதை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றக்கோரி விண்ணப்பிக்கும் என்பதை அட்டர்னி ஜெனரல் ஒருமுறை கூட குறிப்பிடவில்லை.

எனது தலைமையிலான அமர்வைத் தவிர்ப்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொள்கிறது. இந்த மனுவை நாங்கள் நிராகரிக்கிறோம்" என்றார் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்.

அட்டர்னி ஜெனரல் கூறுகையில், தனது நோக்கமோ அரசின் நோக்கமோ இது கிடையாது என்றார். மேலும், இதில் சட்டம் சார்ந்த கணிசமாக கேள்வி எழுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதிய பிறகே, அரசியல்சாசன அமர்வு இதை விசாரிப்பது சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வரப்பட்டது என்று விளக்கமளித்தார்.

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மேலும் கூறுகையில், "விசாரணைக்கு முந்தைய நள்ளிரவில் மனு தாக்கல் செய்து மத்திய அரசு இத்தகைய உத்தியைக் கையாளும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் விசாரித்த பிறகு, இதை வேறொரு பெரிய அமர்வுக்கு மாற்ற மத்திய அரசை அனுமதிக்க முடியாது. வாதங்களைக் கேட்டறிந்த பிறகு, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்கிற முடிவுக்கு நாங்கள் வந்தால், அதை நாங்கள் மாற்றிக் கொள்கிறோம்" என்றார்.

இந்த மனு நவம்பர் 7 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக உள்ள பி.ஆர். கவாயின் பதவிக் காலம் நவம்பர் 23 அன்று நிறைவடைகிறது.

CJI BR Gavai | BR Gavai | Chief Justice of India BR Gavai | Supreme Court | Union Government | Tribunal Reforms Act |