இந்திய சைகை மொழியில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் இந்தியாவின் முதல் சேனலை இன்று (டிச.6) தொடங்கி வைத்தார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
பி.எம். இ-வித்யா சேனல் எண். 31 என்ற பெயரிலான இந்திய சைகை மொழியின் முதல் கல்வி சேனலை, தலைநகர் தில்லியில் உள்ள இந்திய வானொலி நிலையத்தின் ரங் பவனில் இன்று தொடங்கி வைத்தார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
கேட்கும் திறன் குறைபாடு உள்ள பள்ளிக் குழுந்தைகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இந்த புதிய கல்வி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய சைகை மொழியில் பள்ளி வகுப்புகள், தொழில் வழிகாட்டுதல்கள், திறன் பயிற்சி ஆகியவை தொடர்பான நிகழ்ச்சிகள் இதில் ஒளிபரப்பப்பட உள்ளன. மேலும் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகியவை போல, இந்த புதிய சேனலில் இந்திய சைகை மொழி ஒரு பாடமாகவும் ஊக்குவிக்கப்படும்.
2020 புதிய கல்விக் கொள்கையின்படி, இந்தப் புதிய சேனலை தொடங்கியுள்ளது மத்திய அரசு. சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய கல்விச் சூழலை நாட்டில் உருவாக்கம் வகையில், இந்திய சைகை மொழியை (indian sign language) மேம்படுத்துவதை ஊக்குவிக்கிறது புதிய கல்விக் கொள்கை.
கேட்கும் திறன் குறைபாடுகளைக் கொண்டுள்ள மாணவர்களுக்கான கல்விப் புத்தகங்களை இந்திய சைகை மொழியில் உருவாக்குவதையும் புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. அத்துடன் தேவைப்படும் இடங்களில் உள்ளூர் சைகை மொழிகளுக்கு முக்கியத்துவம் வழங்கவும் அறிவுறுத்துகிறது புதிய கல்விக் கொள்கை.