கோப்புப்படம் 
இந்தியா

3 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கிழக்கு நியூஸ்

பெங்களூரு, புனே, தானே ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பெங்களூரு, புனே, தானே ஆகிய நகரங்களில் மேற்கொள்ளவுள்ள மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இரு புதிய விமான நிலைய வசதிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதல் வழித்தடம் 21 மெட்ரோ ரயில் நிலையங்களை உள்ளடக்கி 32.15 கி.மீ. தூரத்துக்கு அமையவிருக்கிறது. இரண்டாம் வழித்தடம் 9 மெட்ரோ ரயில் நிலையங்களை உள்ளடக்கி 12.50 கி.மீ. தூரத்துக்கு அமையவிருக்கிறது. ரூ. 15,611 கோடி செலவில் இது கட்டமைக்கப்படவுள்ளது.

தானே ஒருங்கிணைந்த ரிங் மெட்ரோ ரயில் திட்டம் ரூ. 12,200 கோடி செலவில் விரிவுபடுத்தப்படவுள்ளது. புனேவில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ. 2,954 கோடி செலவில் மேற்கொண்டு 5.46 கி.மீ. தூரத்துக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்தப் பணிகள் 2029-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டி வரும் நிலையில், மூன்று புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.