ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை எதிர்த்து மகாராஷ்டிரா முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக சிவ சேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
துபாயில் நாளை (செப். 14) நடைபெறவுள்ள ஆசிய கோப்பையின் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இணையும் கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், இந்தக் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தன் கட்சியினர் போராட்டம் நடத்தப் போவதாக மகாராஷ்டிராவின் சிவசேனா (யுபிடி) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாளை (செப். 14) நடக்கவுள்ள ஆசிய கோப்பையின் இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியைப் புறக்கணிப்பதே பயங்கரவாதத்திற்கு எதிரான நமது நிலைப்பாட்டைக் காட்டும் வாய்ப்பாகும். பெஹல்காம் தாக்குதல் நடந்தபோது தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாயக் கூடாது என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் கிரிக்கெட்டும் ரத்தமும் மட்டும் எப்படி இப்போது ஒன்றாகப் பாய்கிறது? போரும் கிரிக்கெட்டும் எப்படி ஒரே நேரத்தில் நடக்கும்?
ஏற்கெனவே நாட்டுப் பற்றைப் பயன்படுத்தி வியாபாரம் செய்து விட்டார்கள். இப்போது கிரிக்கெட் போட்டியும் நடத்த வேண்டும் என்கிறார்கள். அவர்களுக்கு அதன் மூலம் வரும் பணமும் தேவைப்படுகிறது. நாளை சிவ சேனா கட்சியின் மகளிர் அணியினர் மகாராஷ்டிராவின் சாலைகளுக்கு வந்து போராட்டம் நடத்துவர்கள். ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் குங்குமத்தை அவர்கள் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைப்பார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Uddhav Thackrey | India Vs Pakistan | Asia Cup | Cricket | Operation SIndhoor | Boycott India Pakistan Match |