படம்: ANI
இந்தியா

லட்டு சர்ச்சை: திருப்பதி கோயிலில் மஹாஷாந்தி யாகம்!

கிழக்கு நியூஸ்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மஹாஷாந்தி யாகம் நடத்தப்பட்டது.

கோயில் பிரசாதமான லட்டுவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், இன்று யாகம் மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கலப்படம் செய்யப்பட்ட நெய்யில் தயாரிக்கப்பட்ட பிரசாதம் மற்றும் லட்டுவைக் கடவுளுக்குப் படைத்து தவறிழைக்கப்பட்டது. இந்தத் தவறை சரி செய்வதற்காகவும், கோயிலின் புனிதத் தன்மையைக் காக்கவும் பிராயச்சித்தமாக மஹாஷாந்தி யாகம் நடத்தப்பட்டது. லட்டு மற்றும் பிரசாதம் தயாரிக்கப்படும் மடப்பள்ளிகளில் பஞ்சகாவியத்தைத் தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டன. ஒட்டுமொத்த கோயில் வளாகமும் பஞ்ச காவியத்தால் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன."

இந்தச் சடங்கை 8 அர்ச்சகர்கள், 3 ஆகம விதி ஆலோசகர்கள் ஆகியோர் மேற்கொண்டார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைமைச் செயல் அதிகாரி ஷாமலா ராவ் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் இதில் பங்கெடுத்தார்கள்.