ANI
இந்தியா

போராட்டத்தைத் தற்காலிகமாகத் திரும்பப் பெற்ற லாரி ஓட்டுநர்கள்

கிழக்கு நியூஸ்

மத்திய உள்துறைச் செயலர் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்கள்.

குற்றவியல் நடைமுறைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்குப் பதில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்சியா சட்டங்கள் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டத்துக்குப் பதில் கொண்டுவரப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்படி விபத்து ஏற்படுத்திவிட்டு காவல் துறையினர் அல்லது அதிகாரிகள் யாரிடமாவது விபத்து குறித்து தகவல் தெரிவிக்காமல் சென்றுவிட்டால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 7 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். முன்பு இந்திய தண்டனைச் சட்டம் 304A-ன் கீழ் விபத்து ஏற்படுத்திவிட்டு தகவல் தெரிவிக்காமல் சென்றால் ஓட்டுநர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுவதற்கு வழிவகை செய்தது.

இந்தப் புதிய சட்டத்தை எதிர்த்து லாரி ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கியதிலிருந்து சரியாக இரவு 12 மணி முதல் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போராட்டத்தைத் தொடர்ந்ததால், வடமாநிலங்களில் சில இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. தெலங்கானாவில் வாகன ஓட்டிகள் தட்டுப்பாட்டுக்கு அஞ்சி பெட்ரோல் நிலையங்களில் குவிந்தார்கள்.

இதைத் தொடர்ந்து மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா செவ்வாய்க்கிழமை மாலை அனைத்து இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு அஜய் பல்லா கூறியதாவது:

"அனைத்து இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். புதிய சட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்பதை அரசு தரப்பில் தெரிவித்தோம். மேலும், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் 106 (2) என்கிற அம்சத்தை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே அதுகுறித்து முடிவெடுப்போம்" என்றார்.

இதைத் தொடர்ந்து, வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதாக லாரி ஓட்டுநர்கள் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பின் மூலம் வாகன ஓட்டிகள் பெருநிம்மதி அடைந்துள்ளார்கள்.