இந்தியா

புனே மாவட்ட ஆட்சியர் மீது சர்ச்சைக்கு ஆளான பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா புகார்

ராம் அப்பண்ணசாமி

சர்ச்சைக்கு ஆளான மராட்டிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கார், புனே மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் திவாசே தன்னை துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார்.

கடந்த ஜூலை 15-ல் வாஷிம் மாவட்டக் காவல்துறையைச் சேர்ந்த 3 பெண் காவலர் அதிகாரிகள் பூஜாவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர். இதை அடுத்து, புனே ஆட்சியர் மீது பூஜா கேத்கார் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியானது. பூஜாவின் புகார் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க புகார் மனு புனே நகர காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் அளித்தனர் வாஷிம் மாவட்ட காவல்துறையினர்.

புனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா, பயிற்சி அதிகாரிகளுக்கான சலுகைகளைத் தாண்டி வேறு பல சலுகைகளை பெற முயற்சித்ததாக சர்ச்சை எழுந்தது.

இதை அடுத்து புனே மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் திவாசே அளித்த புகாரைத் தொடர்ந்து மராட்டிய மாநில தலைமைச் செயலாளரால் வாஷிம் மாவட்டத்துக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார் பூஜா. இந்நிலையில் புனே மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் திவாசே தன்னை துன்புறுத்தியதாக அவர் மீது பூஜா புகார் அளித்துள்ளார்.

முன்பு அகில இந்திய குடிமை பணி தேர்வை எழுத சட்டவிரோதமாக ஓபிசி சான்றிதழையும், மாற்றுத் திறனாளி சான்றிதழையும் பூஜா சமர்ப்பித்ததாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 16) மாவட்ட பயிற்சியில் இருந்து மராட்டிய மாநில அரசால் விடுவிக்கப்பட்டார் பூஜா. மேலும் ஜூலை 23-க்குள் முசோரியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்குத் திரும்ப பூஜாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.