இந்தியா

மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து!

ராம் அப்பண்ணசாமி

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் `ரங்காபானி’ என்ற இடத்தில், காலை 9 மணியளவில் ரயில் விபத்து நடந்துள்ளது.

திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் இருந்து கிளம்பி சியல்டா (கொல்கத்தா) நோக்கிச் சென்றுகொண்டிருந்த கஞ்சஞ்ஜங்கா விரைவு ரயில் மீது அதற்குப் பின்னால் வந்துகொண்டிந்த சரக்கு ரயில் மோதியதால் இந்த விபத்து நடந்துள்ளது.

ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலில், கஞ்சஞ்ஜங்கா விரைவு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 15 பேர் மரணமடைந்துள்ளனர், பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்க அருகிலிருக்கும் பகுதிகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

`நடந்த சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். மேற்கொண்ட தகவல்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ், பேரிடர் மீட்புக்குழு ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்’, என இந்த விபத்து பற்றித் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜீ.

`மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில்வே, தேசிய பேரிடர், மாநில பேரிடர் அதிகாரிகள் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றனர். ரயில்வே மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்’ என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சரக்கு ரயிலை இயக்கிய ஓட்டுநர் சிக்னலில் ரயிலை நிறுத்தாமல் சென்றதே இந்த விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த ஓட்டுநர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மேற்குவங்க ரயில் விபத்து குறித்த உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே அமைச்சகம். தொடர்புக்கு:  033-2350 8794, 033-2383 3326.