ANI
இந்தியா

மனிதத் தவறால் ஏற்பட்டதா மேற்கு வங்க ரயில் விபத்து?: ரயில்வே வாரியம் விளக்கம்!

ராம் அப்பண்ணசாமி

ஜூன் 17-ல் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் `ரங்காபானி’ என்ற இடத்தில், திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் இருந்து கிளம்பி சியல்டா (கொல்கத்தா) நோக்கிச் சென்றுகொண்டிருந்த கஞ்சஞ்ஜங்கா விரைவு ரயில் மீது அதற்குப் பின்னால் வந்துகொண்டிந்த சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து மேற்கொள்ளப்பட்ட முதல்நிலை விசாரணையில், மனிதத் தவறு, பழுதான சிக்னல் அமைப்பு போன்றவை இந்த ரயில் விபத்து நடைபெறக் காரணமாக இருந்தன என்று தெரியவந்துள்ளது.

குறிப்பட்ட தூரத்துக்குள் இருக்கும் ரயில்பாதை சிக்னல் அமைப்பு வேலை செய்யவில்லை என்றால், அந்தப் ரயில்பாதையில் பயணிக்கும் ரயில் ஓட்டுநர்களுக்கு வழியில் இருக்கும் சிகப்பு சிக்னல்களைச் கடந்து செல்ல TA-912 என்றழைக்கப்படும் பிரத்தியேகமான அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.

ரங்காபானி ரயில்பாதையில் இருந்த சிக்னல் அமைப்பு பழுதானதால் கஞ்சஞ்ஜங்கா விரைவு ரயில், சரக்கு ரயில் இரண்டுக்குமே TA-912 அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே நடைமுறைப்படி இந்த அனுமதிச்சீட்டு பெறும் ரயில் ஓட்டுநர்கள் பழுதான ஒவ்வொரு சிக்னலிலும் ஒரு நிமிடம் ரயிலை நிறுத்திவிட்டு பிறகு 10 கி.மீ வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் முன் செல்லும் ரயிலுக்கு இடையே 150 மீட்டர் இடைவெளியைப் பின்வரும் ரயில் கடைபிடிக்க வேண்டும். ஆனால் சரக்கு ரயில் ஓட்டுநர் இந்த விதிகளைப் பின்பற்றவில்லை எனத் தெரியவந்துள்ளது.

`ரங்காபானி மற்றும் சத்தர்ஹாத் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள சிக்னல்களைக் கடக்க, சரக்கு ரயில் ஓட்டுநருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான வேகத்தில் சரக்கு ரயில் இயக்கப்பட்டுள்ளது’ என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

காலை 5.50 மணி முதல் அந்த ரயில்பாதையில் இருக்கும் சிக்னல் அமைப்பு பழுதானதால் சரக்கு ரயில் ஓட்டுநருக்கு சிக்னல்களைக் கடந்து செல்ல TA-912 அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. ரங்காபானியில் இருந்து 8.42 மணிக்குக் கிளம்பிய சரக்கு ரயில், கஞ்சஞ்ஜங்கா விரைவு ரயில் மீது 8.55 மணிக்கு மோதியது.

கஞ்சஞ்ஜங்கா விரைவு ரயில் ஓட்டுநர் TA-912 அனுமதிச்சீட்டு நடைமுறையை முழுவதுமாகக் கடைபிடித்தார். ஆனால் சரக்கு ரயில் ஓட்டுநர் TA-912 அனுமதிச்சீட்டு நடைமுறையைப் பின்பற்றவில்லை எனத் தெரியவந்துள்ளது. எந்த வேகத்தில் சரக்கு ரயில் ஓட்டுநர் பயணித்தார் என்றத் தகவலை ரயில்வே வாரியம் இதுவரை வெளியிடவில்லை.