இந்திய ராணுவத்தினர் - கோப்புப்படம் ANI
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு!

வாகனங்கள் செல்ல முடியாத பகுதியில் வைத்து பிற்பகல் 2.30 மணி அளவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ராம் அப்பண்ணசாமி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் மலைப் பகுதியில் வைத்து சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட செய்தி வெளியாகியுள்ளது.

பஹல்காமில் உள்ள பைசரன் மலையின் புல்வெளிப் பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகள் மீது, இன்று (ஏப்.22) தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். வாகனங்கள் செல்ல முடியாத பகுதியில் வைத்து பிற்பகல் 2.30 மணி அளவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

புல்வெளிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி மேற்கொண்டிருந்தபோது, ராணுவ உடையில் அங்கு வந்த 2-3 தீவிரவாதிகள், அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் குஜராத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைக்கப்பெற்றதும், சம்மந்தப்பட்ட இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். உடனடியாக காயமடைந்த சுற்றுலாப் பயணிகளை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துவிட்டு, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட தீவிரவாதிகளைத் தேடி வருகின்றனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் தற்போது சுற்றுலாப் பருவம் உச்சத்தில் இருக்கும் வேளையிலும், நடப்பாண்டின் அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையிலும் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அண்மையில் ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.