இந்தியா

ஜனநாயகத்தின் ஆன்மாவைக் காக்க...: வாக்கு எந்திரம் குறித்து ஜெகன்மோகன் ரெட்டி பதிவு!

ராம் அப்பண்ணசாமி

`ஜனநாயகத்தின் ஆன்மாவைக் காக்க’, வாக்கு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குசீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என, ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

`உலகெங்கிலும் உள்ள முன்னேறிய ஜனநாயகங்களில் வாக்குச்சீட்டு முறைதான் உபயோகத்தில் உள்ளது, வாக்கு எந்திரங்கள் அல்ல. எனவே ஜனநாயகத்தின் ஆன்மாவைக் காக்க நாமும் அதை நோக்கி நகர வேண்டும்’ எனத் தன் எக்ஸ் தளத்தில் வாக்குசீட்டு முறைக்கு ஆதரவாக ஜெகன் மோகன் ரெட்டி பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பும் அதே நேரத்தில் வரும்காலங்களில் நடக்கும் இந்தியத் தேர்தலில் வாக்குசீட்டு முறையை மீண்டும் அமல்படுத்தவேண்டும் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், `வாக்குச்சீட்டு முறை வாக்கு எந்திரங்களை மாற்ற வேண்டும். வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. வாக்களிப்பது நம் அடிப்படை உரிமை. மக்களுக்குத் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கு வாக்கு சென்று சேர்ந்ததா என்ற கேள்வி உள்ளது’ என்று இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

`இந்தியாவில் வாக்கு எந்திரங்கள் கருப்புப்பெட்டிகள். அதன் நம்பகத்தன்மையை சோதிக்க யாருக்கும் அனுமதி இல்லை’ என வாக்கு எந்திரங்களின் பயன்பாட்டை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார்.