படம்: https://x.com/AppavuSpeaker 
இந்தியா

சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு: அப்பாவு வெளிநடப்பு

"இந்த மாநாட்டில் நான் பேசக் கூடாது என்றால், வேறு எங்குதான் பேச முடியும்?"

கிழக்கு நியூஸ்

அனைத்து இந்திய சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் ஆளுநர் குறித்து பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெளிநடப்புச் செய்தார்.

85-வது அனைத்து இந்திய சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு பிஹாரில் இன்றும் நாளையும் இரு நாள்களுக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். தமிழ்நாட்டிலிருந்தும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டார்.

மாநாட்டில் அப்பாவு உரையாற்றியதாவது:

"தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநர் அரசியலமைப்பின் அம்சங்களைக் கேலிக்குள்ளாக்கி வருகிறார். தமிழ்நாட்டு மக்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், தமிழ்நாடு சட்டப்பேரவையையும் ஆளுநர் தொடர்ந்து அவமதித்து வருகிறார். இதுமாதிரியான செயல்கள் தமிழ்நாட்டில் மட்டும் அரங்கேறவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் அதிகரித்து வருகின்றன.

தனது அரசியலமைப்புக் கடமைகளை ஆளுநர் நிறைவேற்றுவதில்லை. அரசியலமைப்புச் சட்டங்களை ஆளுநர் மீறுவதால், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. கூட்டத்தில் பங்கெடுத்துள்ள அனைவரும் இந்த வேதனையைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று அப்பாவு பேசினார்.

அப்பாவு பேசியபோது குறுக்கிட்ட மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண், ஆளுநர் குறித்த கருத்துகளை அப்பாவு தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், ஆளுநர் குறித்து அப்பாவு பேசியவை பதிவு செய்யப்படாது என்றும் கூறினார்.

இதற்கு எதிர்வினையாற்றிய தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, "தமிழ்நாட்டின் ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார். அதுகுறித்து இந்த மாநாட்டில் நான் பேசக் கூடாது என்றால், வேறு எங்குதான் பேச முடியும்?" என்று கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார்.