யூசுப் பதான் (கோப்புப்படம்)
யூசுப் பதான் (கோப்புப்படம்) ANI
இந்தியா

மக்களவைத் தேர்தலில் யூசுப் பதான் போட்டி: திரிணமூல் வேட்பாளர்கள் அறிவிப்பு

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலுக்கான 42 வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. இதற்கான முழு வேட்பாளர்கள் பட்டியலும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இவர் எதிர்பார்த்தபடி டைமண்ட் ஹார்பர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பர்ஹாம்பூர் தொகுதியில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதீர் ரஞ்சன் 1999 முதல் இந்தத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்வாகியுள்ளார். மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி அரசைக் கடுமையாக விமர்சிக்கும் இவர், இந்த முறையும் பர்ஹாம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் யூசுப் பதான், அவரது தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.

மக்களவையிலிருந்து கடந்த டிசம்பரில் நீக்கப்பட்ட மஹுவா மொய்த்ரா கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், பாஜக 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மீதமுள்ள இரு இடங்களில் காங்கிரஸ் வெற்றி கண்டது.