நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திமுக எம்.பி திருச்சி சிவா Sansad TV
இந்தியா

வட இந்தியாவில் வஉசி, பாரதி பெயரில் சாலைகள் உண்டா?: திருச்சி சிவா கேள்வி | Rajya Sabha |

தமிழ்நாட்டில் நேதாஜி பெயரில் சாலை வைத்துள்ளோம். கஸ்தூரி பாய் காந்தி மருத்துவமனை வைத்துள்ளோம்....

கிழக்கு நியூஸ்

வட இந்தியாவில் வ.உ.சி, பாரதியார் பெயரில் சாலைகள் உள்ளதா என்று கேட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், ஜெய்ஹிந்த் செண்பகராமன் போன்றோர் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில், வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் விவாதம் நடந்தது. இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

”வந்தே மாதரம் பாடலில் உள்ள சிறப்பை பற்றி அனைவரும் பேசினார்கள். மக்கள் பிரச்னைகளைப் பேசக் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், வந்தே மாதர விவாதம் மிக முக்கியமென இரு அவைகளிலும் மத்திய அரசு விவாதம் நடத்துகிறது. ஆனால், தற்போது மாநிலங்களவையில் அவை முன்னவர் இல்லை, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் இல்லை. மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மட்டுமே உள்ளார். பொறுப்புணர்ச்சி என்பது விவாதத்தைக் கொண்டு வருவதில் மட்டுமல்ல, அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதிலும் உள்ளது.

வந்தே மாதரத்தை பற்றி விவாதிக்க சொன்னால் அவர்கள் நேரு மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள். வந்தே மாதரமும், ஜன கன மன தேசிய கீதமும் வங்காள மொழியில் இருந்தாலும் காஷ்மீர் முதல் குமரி வரை பரவியது. யாரும் எந்த மொழி எனப் பார்க்கவில்லை. எல்லோருக்கும் நாடு விடுதலை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே இருந்தது.

தமிழ்நாட்டில் நேதாஜி பெயரில் சாலை வைத்துள்ளோம். கஸ்தூரி பாய் காந்தி மருத்துவமனை என்று காந்தியின் மனைவி பெயரில் மருத்துவமனை வைத்துள்ளோம். கமலா நேரு பூங்கா என்று நேருவின் மனைவியின் பெயரில் பூங்கா வைத்துள்ளோம். வட இந்தியாவில் வ.உ.சிதம்பரனார் சாலை உண்டா?, பாரதியார் தெரு உண்டா?, யாருக்காவது வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி தெரியுமா? அவர்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டார்கள்? ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதன்முதலில் எதிர்த்துப் போராடியவர் பூலித்தேவன். பின்னர், கட்டபொம்மன். இவர்களை வட இந்தியர்கள் அறிவார்களா? இலங்கை பகுதியை மீட்டெடுத்த வேலுநாச்சியாரை தெரியுமா? பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது.

வ.உ.சி. பற்றி பிரதமர் பேசும்போது கூறுகிறார். ஆனால் அவருக்காக என்ன செய்திருக்கிறீர்கள்? ரஷிய அதிபருக்கு குடியரசுத் தலைவர் விருந்தளிக்கும் போது, இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களும் அழைக்கப்படவில்லை. வெள்ளையர்களை வணிகத்தில் தோற்கடிக்க வ.உ.சி. சுதேசி கப்பலை வாங்கினார். அதனை வந்தே பாரதம் என்றழைத்தார். அவருக்கு இரு ஆயுள் தண்டனை விதித்து, சிறையில் செக்கு இழுக்க வைத்தார்கள். வட இந்தியாவில் இவர்களைப் பற்றி யாருக்கு தெரியும்? குறைந்தபட்சம் இப்படியெல்லாம் தலைவர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்று உங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலாவது கொண்டு வர வேண்டும்.

ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்தை உருவாக்கியவரே செண்பகராமன் என்பவர்தான். இந்தியாவை தவறாக பேசிய ஹிட்லரிடம் இருந்து மன்னிப்பு கடிதம் பெற்றவர். முதன்முதலாக ஹிட்லர் மன்னிப்பு கடிதம் எழுதியது தமிழனுக்குத் தான். நேதாஜிக்கும் முன்னோடியான இவரின் பெயர் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் இல்லை. நீங்கள் பேசும் தேசியம் உண்மை என்றால் காஷ்மீர் முதல் குமரியை ஒன்றாக நடத்துங்கள். எல்லா மொழியையும் ஒன்றாக நடத்துங்கள். தீரன் சின்னமலையை தமிழ்நாடு மட்டுமே அறியும் தில்லியும், அலகாபாத்தும், பாட்னாவும் அறிய வேண்டும்” என்றார்.

DMK MP Tiruchi Siva, who asked if there are roads named after VOC and Bharathiyar in North India, questioned why people like Veerapandia Kattabomman, Pulitevan, and Jaihind Senbagaraman were being ignored.