சுயலாபத்திற்காக ஏழைகளின் இல்லங்களில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்பவர்களுக்கு ஏழைகள் குறித்த அறிவிப்புகள் சலிப்பூட்டவே செய்யும் என ராகுல் காந்தியை மக்களவையில் கடுமையாக சாடியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
கடந்த ஜன.31 அன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் உரை சலிப்பூட்டும் வகையில் இருந்ததாக கருத்து தெரிவித்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று (ஜன.3) நாடாளுமன்றத்தில் தொடங்கியது. இதனை அடுத்து விவாதத்தின் இறுதியாக மக்களவையில் இன்று வழங்கிய பதிலுரையின்போது பிரதமர் மோடி கூறியதாவது,
`தங்களின் சுயலாபத்திற்காக ஏழைகளின் இல்லத்தில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்பவர்களுக்கு, ஏழைகள் குறித்து நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகள் சலிப்பூட்டவே செய்யும். தொடர்ந்து தோல்விகளையே சந்தித்துக்கொண்டிருக்கும் அந்த தலைவர்கள் தங்கள் மனதின் சமநிலையை இழந்துவிட்டார்கள்.
முத்தலாக்கை நடைமுறையை ஒழித்துக்கட்டியதன் மூலம் நாங்கள் நீதியை நிலையாட்டியுள்ளோம், அதேநேரம் அரசியலமைப்புச் சட்டத்தின் தங்கள் பைகளில் வைத்திருக்கும் ஒரு சிலர் இஸ்லாமியப் பெண்களின் உரிமை பறிபோவதற்கான காரணமாக இருந்துள்ளார்கள். இதுவரை ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்தவர்களால் மட்டுமே வீடு வாங்குவதன் அருமையை உணர முடியும். கழிவறை இல்லாததால் முந்தைய காலங்களில் பெண்கள் கடுமையான துன்பங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். இந்த வசதிகள் இருப்பவர்களுக்கு துன்பப்படுபவர்களின் நிலை புரியாது. 12 கோடிகளுக்கும் மேல் கழிவறைகள் கட்டிக்கொடுத்துள்ளோம்’ என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளாக வருமான வரியைக் குறைத்ததன் மூலம், நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பை உயர்த்தியதாகக் குறிப்பிட்டார்.
மேலும், 2014-க்கு முன்பு அமலில் இருந்த கடுமையான வரிவிதிப்பு முறை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்ததாகவும், அந்த சவால்களை தீர்க்கும் முயற்சிகளை முன்னெடுத்தாகவும் அவர் தன் உரையில் குறிப்பிட்டார்.