PRINT-87
இந்தியா

அரசியல் செய்ய இது நேரமல்ல: மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்!

ராம் அப்பண்ணசாமி

`எங்கள் கவனமெல்லாம் மறுசீரமைப்பின் மீது உள்ளது. அதுதான் முக்கியம். மீட்புப் பணிகள் நிறைவு பெற்றன. அரசியல் செய்ய இது நேரமல்ல. காயமடைந்தவர்களை நான் சந்தித்துப் பேசினேன்’ என செய்தியாளர்களிடம் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

ஜூன் 17 காலை 9 மணி அளவில் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் `ரங்காபானி’ என்ற இடத்தில் ரயில் விபத்து நடந்தது.

திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் இருந்து கிளம்பி சியல்டா (கொல்கத்தா) வரை செல்லும் கஞ்சஞ்ஜங்கா விரைவு ரயில் ரங்காபானிக்கு அருகே நின்றுகொண்டிருந்தது. இந்த கஞ்சஞ்ஜங்கா ரயில் மீது எதிர்பாராவிதமாக அதற்குப் பின்னால் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதால், இரண்டு ரயில்களும் தடம்புரண்டன.

இந்த விபத்தில் சரக்கு ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநர் மரணமடைந்தார். அவருடன் சேர்த்து மொத்தம் 8 பயணிகள் மரணமடைந்தனர். விபத்தில் மரணமடைந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

காலை நேரத்தில் அங்கே கடுமையாக மழை பெய்து வந்ததால் ஆரம்பத்தில் மீட்புப் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து அந்த வழியில் செல்லவிருந்த 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மாலை 5 மணி அளவில் விபத்து நடந்த பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ். பிறகு விபத்தில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.