ஆர்எஸ்எஸ் - பாஜக இடையே சிக்கல் இருக்கலாம் ஆனால் மோதல் இல்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியதாவது:
"எல்லா அரசுகளுடனும் எங்களுக்கு நல்லுறவு இருக்கிறது. மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுடன் நல்லுறவு இருந்து வருகிறது" என்றார்.
பாஜக தேசியத் தலைவரைத் தேர்வு செய்வதில் நிலவும் தாமதம் பற்றி தெளிவுபடுத்துகையில், "எல்லாவற்றையும் ஆர்எஸ்எஸ் தான் தீர்மானிக்கிறதா? அது முற்றிலும் தவறானது. இது நடக்கவே நடக்காது. பல ஆண்டுகளாக நான் சங்கத்தை நடத்தி வருகிறேன். பாஜக அரசாங்கத்தை நடத்தி வருகிறது. ஆட்சியை நடத்துவதில் பாஜக வல்லமை படைத்தது. எனவே, நாங்கள் பரஸ்பரம் அறிவுரை கூறலாம். ஆனால், பாஜக தேசியத் தலைவர் குறித்து நாங்கள் முடிவெடுக்க முடியாது. நாங்கள் முடிவெடுப்பதாக இருந்தால், அதற்கு அவகாசம் எடுக்காது. நாங்கள் முடிவெடுப்பதில்லை.
உங்களுக்கான அவகாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் கூறுவதற்கு எதுவும் இல்லை. நற்பணிகளைச் செய்ய உதவி தேவைப்பட்டால், பாஜக மட்டுமில்லாது எல்லோருக்கும் உதவுவோம்" என்றார் அவர்.
மேலும் பாஜகவுடனான உறவு குறித்து தெளிவுபடுத்திய அவர், "ஏதோ சண்டை இருப்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. சிக்கல் இருக்கலாம். ஆனால் சண்டை ஏதும் இல்லை. எங்களுடைய இலக்குகள் ஒன்று தான். அது நாட்டு நலன் சார்ந்தது" என்றார் மோகன் பாகவத்.
RSS | RSS Chief Mohan Bhagwat | Mohan Bhagwat | BJP President | Narendra Modi | RSS BJP |