கோப்புப்படம் ANI
இந்தியா

இந்தியாவில் புதிய கொரோனா அலை?: தரவு பகுப்பாய்வாளர் தகவல்

மே 19 நிலவரப்படி இந்தியாவில் 93 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

புதிய கொரோனா அலை எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என தரவு பகுப்பாய்வாளர் விஜயானந்த் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூர், ஹாங் காங், சீனா, தாய்லாந்து என ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகச் செய்திகள் வருகின்றன. புதிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. சிங்கப்பூரில் ஏப்ரல் கடைசி வாரத்தில் 11,100 ஆக இருந்த கொரோனா பாதிப்புகள் மே தொடக்கத்தில் 14 ஆயிரம் பாதிப்புகளாக அதிகரித்துள்ளன. இருந்தபோதிலும், இது அதிகளவில் பரவக்கூடிய தன்மை உடையது என்பதற்கான ஆதாரம் இல்லை என்று அதிகாரபூர்வமாகக் கூறப்பட்டது.

இதனால், இந்தியாவிலும் கொரோனா தொற்றுக்கான பாதிப்பு அதிகரிக்குமா என்ற கேள்வி எழத் தொடங்கியது. ஆனால், இந்தியாவின் கொரோனா அலை எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என பிரபல தரவு பகுப்பாய்வாளர் விஜயானந்த் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜயானந்தின் எக்ஸ் தளப் பதிவு:

"புதிய கொரோனா அலை எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், அவை கொரோனா அலையாக மாறுமா என்பதை தற்போது கூற முடியாது. ஒவ்வோர் ஆண்டும் இதுமாதிரி பிராந்திய அளவிலான கொரோனா பாதிப்பு அதிகரிப்பைப் பார்க்கிறோம். சில வாரங்களில் இது தணிந்துவிடும். மே 12 நிலவரப்படி இந்தியாவில் 93 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

மே 19 நிலவரப்படி இந்தியாவில் 93 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.