வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்படுவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார்.
உஜ்வாலா திட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு ரூ. 550 என விலை நிர்ணயம். மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு ரூ. 853 என விலை நிர்ணயம்.
மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
"வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்கிறது. உஜ்வாலா திட்டப் பயனர்களுக்கு சிலிண்டரின் விலை ரூ. 500-ல் இருந்து ரூ. 550 ஆக உயர்கிறது. மற்றவர்களுக்கு ரூ. 803-ல் இருந்து ரூ. 853 ஆக உயர்கிறது. இந்த விலை உயர்வு முடிவை ஒவ்வொரு 2-3 வாரங்களுக்கு ஒருமுறை பரிசீலனை செய்வோம். எனவே தான், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்வு வாடிக்கையாளர்களுக்கான பெட்ரோல், டீசல் விலையில் எதிரொலிக்கவில்லை" என்றார் ஹர்தீப் சிங் புரி.
இந்த விலை உயர்வானது செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.
முன்னதாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி தலா ரூ. 2 உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும், கலால் வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராது என பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்தது.