கோப்புப்படம் 
இந்தியா

மஹாராஷ்டிரத்தில் ஒன்றிணைகிறதா தாக்கரே குடும்பக் கட்சிகள்?

"உத்தவ் தாக்கரேவுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை."

கிழக்கு நியூஸ்

மஹாராஷ்டிரத்தில் இரு துருவமாக இருந்து வந்த உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனை மற்றும் மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனை இணைந்து செயல்படுவது குறித்து உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.

மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே தரப்பு சிவசனை இடம்பெற்றிருந்த மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனை இணைந்து உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனை மற்றும் ராஜ் தாக்கரேவின் மஹாராஷ்டிர நவநிர்மாண் சிவசேனை இணைவது குறித்த பேச்சுகள் எழுந்துள்ளது மஹாராஷ்டிர அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது.

"ராஜ் தாக்கரேவுடன் இணைய நான் தயார். மஹாராஷ்டிர நலனுக்காக நான் முன்வரத் தயாராக இருக்கிறேன். அனைத்து சண்டைகளுக்கும் நான் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். மஹாராஷ்டிரத்தின் நலனே எனது முன்னுரிமை" என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

ராஜ் தாக்கரேவும் இதையொட்டியே பேசியுள்ளார். "உத்தவ் தாக்கரே மற்றும் எனக்கு இடையிலான பிரச்னை என்பது மிகச் சிறியது. இவற்றைவிட மஹாராஷ்டிரம் பெரிது.

ஒன்றிணைவது என்பது கடினமான காரியம் அல்ல. என் விருப்பமோ அல்லது சுயநலம் சார்ந்ததோ இல்லை. பெரிய கண்ணோட்டத்தில் அணுக வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மராட்டிய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கட்சியைத் தொடங்க வேண்டும்.

உத்தவ் தாக்கரேவுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை. அவருக்கு என்னுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் இருக்கிறதா என்பது தான் கேள்வி" என்றார் ராஜ் தாக்கரே.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களான இருவரும் 2005 வரை சிவசேனையில் இணைந்து பணியாற்றினார்கள். இதன்பிறகு, ராஜ் தாக்கரே தனித்துப் பயணிக்கத் தொடங்கி மஹாராஷ்டிர நவநிர்மாண் கட்சியைத் தொடங்கினார். உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே கடந்த டிசம்பர் முதல் மூன்று முறை திருமண நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.