PRINT-83
இந்தியா

தீவிரவாதிகள் கவனம் ஜம்மு மீது இருப்பது கவலைக்குரிய விஷயம்: கரண் சிங்

ராம் அப்பண்ணசாமி

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், ஜம்மு பகுதியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல்களை முன்வைத்து, `தீவிரவாதிகளின் கவனம் ஜம்மு மீது இருப்பது கவலைக்குரிய விஷயம்’ என்று கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் ஆளுநருமான கரண் சிங்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் `இது கவலைக்குரிய விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை. வருடக்கணக்கில் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் செயல்பட்டு வந்தனர் தீவிரவாதிகள். பெரும் சிரமத்துக்கிடையே தைரியத்துடன் அவர்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர். இப்போது ஜம்மு மீது அவர்கள் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். கடந்த 6 மாதங்களில் நம் மக்களையும், பல ராணுவ வீரர்களையும் இழந்துள்ளோம்.

இது மிகவும் தீவிரமான விஷயம். இதற்கு என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது. முன்பு இந்திய ராணுவத்தின் வடக்கு தலைமையகத்தின் (உதம்பூர்) வரம்புக்குள் ஜம்மு பகுதி இருந்தது. ஆனால் சில வருடங்களுக்கு முன் இந்திய ராணுவத்தின் மேற்கு தலைமையகத்தின் (சண்டிகர்) வரம்புக்குள் ஜம்மு பகுதி கொண்டு வரப்பட்டது. மீண்டும் ஜம்மு பகுதியை ராணுவத்தின் வடக்கு தலைமையகத்தின் கீழ் கொண்டுவந்தால் பிரச்சனைக்கு முடிவு காணலாம்’ என்றார் கரண் சிங்.

கடைசியாக கடந்த ஜூலை 16-ல் டோடா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் ஒரு அதிகாரி உள்ளிட்ட 4 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது போல கடந்த சில மாதங்களில் ஜம்மு பகுதியின் டோடா, ரியசி, குல்காம், கத்துவா போன்ற பகுதிகளில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

கரண் சிங்கின் தந்தை ஹரி சிங் இந்திய சுதந்திரத்தின்போது ஜம்மு-காஷ்மீரின் மன்னராக இருந்தார். ஜம்மு-காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் 26 அக்டோபர் 1947-ல் கையெழுத்திட்டார் ஹரி சிங். இந்தியாவுடன் இணைந்தாலும் 1952 வரை ஜம்மு-காஷ்மீர் மன்னர் பதவியில் தொடர்ந்தார் ஹரி சிங்.

1952-ல் ஜம்மு-காஷ்மீரில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டதும் அன்றைய பம்பாய்க்குக் குடிபெயர்ந்தார் ஹரி சிங். ஹரி சிங்கின் மகன் கரண் சிங் ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக சுமார் 15 ஆண்டுகள் (1952-1967) பொறுப்பில் இருந்தார்.