PRINT-125
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர்கள் வீர மரணம்

ராம் அப்பண்ணசாமி

ஜூலை 8-ல் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர்.

நேற்று மதியம் 3.30 அளவில் ஜம்மு-காஷ்மீர் கத்துவா மாவட்டத்தின் ஊரகப் பகுதியான பட்நோடா கிராமத்தில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ராணுவ வாகனங்கள் மீது துப்பாக்கி சூடும், குண்டெறி தாக்குதலும் நடத்தினார்கள் தீவிரவாதிகள். இந்த தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர்.

இந்த தாக்குதலை அடுத்து, ஜம்மு-காஷ்மீர் காவல் துறை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவற்றின் வீரர்கள் உதம்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 44-ல் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்ள உதம்பூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக யாத்திரீகர்கள் இன்று பயணம் மேற்கொள்ள இருப்பதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தீவிரவாதிகளின் தாக்குதலில் காயமுற்ற ராணுவ வீரர்கள் பதான்கோட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடந்தது காடுகள் உள்ள கரடுமுரடான பகுதி என்பதால் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது.

கடந்து ஜூன் 9-ல் இருந்து ஜம்மு-காஷ்மீரின் ரியசி, கத்துவா, டோடா ஆகிய 4 பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்றுள்ளது. முன்பு ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு குறித்து டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.