இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு

ராம் அப்பண்ணசாமி

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குல்காம் மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் இந்திய ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேயான முதல் தாக்குதல் மோதர்காம் கிராமத்தில் நடைபெற்றது. தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து வந்த உளவுத் தகவலை அடுத்து ராணுவமும், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் தேடுதல் வேட்டையில் இறங்கியபோது இந்தத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இரண்டாவது தாக்குதல் ஃப்ரிசல் சின்னிகாம் பகுதியில் ராணுவம் நடத்திய தேடுதலின்போது நடைபெற்றுள்ளது. குல்காம் மாவட்டத்தில் நடந்த இந்த இரு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 6 தீவீரவாதிகளும், 2 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர், மேலும் சில ராணுவ வீரர்கள் காயமுற்றுள்ளனர்.

இந்த இரு துப்பாக்கிச் சூடுகளும் குல்காம் மாவட்டத்தின் உட்புற பகுதிகளில் நடந்துள்ளதாகவும், தேசிய நெடுஞ்சாலையோரப் பகுதிகளில் நடைபெறவில்லை எனவும் காஷ்மீர் பகுதியின் ஐஜி வி.கே.பிர்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும், ராணுவமும் இணைந்து தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் ஜம்மு-காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் ராணுவத்துடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.