PRINT-93
இந்தியா

ஜம்மூ காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்!

ராம் அப்பண்ணசாமி

ஜூன் 9-ல் ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் ரியசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, அருகிலிருந்த வைஷ்ணவி தேவி கோவில் அமைந்துள்ள கட்ரா பகுதிக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்த பயணிகள் பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.

இந்தத் தாக்குதலில் பேருந்து ஓட்டுநருக்கு குண்டடிபட்டதால் அவர் பேருந்தின் கட்டுப்பாட்டைக் கைவிட்டார். இதனால் அருகிலிருந்த பள்ளத்தாக்குக்குள் பேருந்து கவிழ்ந்து, பேருந்தில் இருந்த பயணிகளில் 9 பேர் மரணமடைந்தனர், 33 பேர் படுகாயமடைந்தனர்.

பள்ளத்துக்குள் பேருந்து விழுந்த பிறகும் தீவிரவாதிகள் தொடர்ந்து பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்த விபத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட பயணி ஒருவர் தகவல் தெரிவித்தார். இரவு 8.10 மணி அளவில் அருகிலிருந்த கிராம மக்களின் உதவியுடன் பேருந்துக்குள் சிக்கிக்கொண்டிருந்த பயணிகளை மீட்டது காவல்துறை.

இந்திய ராணுவம், ஜம்மூ காஷ்மீர் மாநில காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவை இணைந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் இறங்கியுள்ளது. தாக்குதல் நடந்த பகுதியைச் சுற்றியுள்ள காடுகளில் டிரோன்களை வைத்து தேடுதல் நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய புலனாய்வு முகமையும் இந்த தாக்குதல் குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

தீவிரவாதிகள் தாக்குதலை இந்திய அரசியல் கட்சித்தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.