ANI
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன: மத்திய அரசு

ராம் அப்பண்ணசாமி

ஜூலை 21 வரை இந்த வருடத்தில் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 11 தீவிரவாதத் தாக்குதல்களும், 24 என்கவுண்டர் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன என்றும், இதில் பொது மக்கள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 28 நபர்கள் மரணமடைந்துள்ளதாகவும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பி. பிரதீப் குமார் சிங் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள நித்யானந்த் ராய், கடந்த வருடங்களை ஒப்பிடும்போது ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன என்று தெரிவித்தார்.

2018-ல் ஜம்மு – காஷ்மீரில், 228 தீவிரவாதத் தாக்குதல்களும், 189 என்கவுண்டர் சம்பவங்களும் நடைபெற்றதாகவும், அதில் பொது மக்கள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 146 நபர்கள் மரணமடைந்ததாகவும் பதிலளித்துள்ளார் நித்யானந்த் ராய்.

தீவிரவாதத்தை எதிர்த்து மத்திய அரசு கடைபிடித்து வரும் `முற்றிலும் சகிப்புத்தன்மையற்ற கொள்கை' காரணமாகவே ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன என்று தன் பதிலில் குறிப்பிட்டுள்ளார் மத்திய இணையமைச்சர்.

தீவிரவாத சூழ்நிலையை ஜம்மு - காஷ்மீரில் இருந்து முற்றிலுமாக அகற்றுவதே மத்திய அரசின் அணுகுமுறையாக உள்ளது. ஜம்மு – காஷ்மீரில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. தீவிரவாத்தை ஒழிக்கும் வகையில் அதற்கான நிதி பரிவர்த்தனைகளை முடக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் பதிலளித்துள்ளார் மத்திய இணையமைச்சர்.