ANI
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்: இரு நாட்களில் தீவிரவாதிகளுடன் 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்!

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளும் எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

ராம் அப்பண்ணசாமி

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று (நவ.02) காலை துப்பாக்கிச் சூடு நடைபெற்ற ஒரு மணி நேரத்திலேயே, ஸ்ரீநகருக்கு அருகிலிருக்கும் அனந்தநாக் மாவட்டத்திலும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் லார்னூ பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைக்க தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இருவரில், ஒருவர் வெளிநாட்டவர், மற்றொருவர் இந்தியர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், இந்த இரு தீவிரவாதிகளும் எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. அத்துடன் பிற தீவிரவாதிகளைத் தேடும் பணி அனந்தநாக்கில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஸ்ரீநகரின் மையப் பகுதியில் உள்ள கன்யாரில் இன்று காலை தொடங்கி தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. ஆனால் இது குறித்த முழு தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

நேற்று (நவ.1) காஷ்மீர் பள்ளத்தாக்கின் புட்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உ.பி.யைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் காயமுற்றனர். அவர்களுக்கு ஸ்ரீ நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், நேற்று மாலை ஸ்ரீநகரின் பந்திபுரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் புகுந்து தப்பித்துள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக பாதுகாப்புப் படையினர் தகவல் தெரிவித்தனர்.

இரு நாட்களில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.