ANI
இந்தியா

சிபிஎஸ்இ பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயம்: தெலங்கானா அரசு நடவடிக்கை!

சராசரி தெலுங்கு (சிங்கிடி) புத்தகங்களுக்குப் பதிலாக, எளிய தெலுங்கு (வெண்ணெலா) புத்தகங்களை பள்ளியில் உபயோகப்படுத்த முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ராம் அப்பண்ணசாமி

மாநிலத்தில் செயல்படும் சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப்பாடத்தை கட்டாயமாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது தெலங்கானா காங்கிரஸ் அரசு.

2018-ல் அம்மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் இருந்தபோது, தெலங்கானா மாநிலத்தில் செயல்படும் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய, அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமல்லாமல், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளிலும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை தெலுங்கை கட்டாய மொழிப்பாடமாக படிப்பதற்கு வழிவகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், அந்த சட்டத்தின்படி மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கை கட்டாய மொழிப்பாடமாக கற்பிக்கும் நடவடிக்கையை தெலங்கானா அரசு எடுத்துள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

முதற்கட்டமாக, வரும் கல்வி ஆண்டில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தெலுங்கு மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக சராசரி தெலுங்கு (சிங்கிடி) புத்தகங்களுக்குப் பதிலாக, எளிய தெலுங்கு (வெண்ணெலா) புத்தகங்களை பள்ளியில் உபயோகப்படுத்த அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும், தெலுங்கு அல்லாத பிற தாய்மொழிகளை கொண்ட மாணவர்களும் எளிதாக தெலுங்கை கற்கும் வகையில் இந்த புதிய புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதேபோல, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் கன்னட மொழியை கட்டாயமாக்கும் நடவடிக்கையை அண்மையில் கர்நாடக அரசு மேற்கொண்டது.