கோப்புப்படம் 
இந்தியா

உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோரினார் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

கிழக்கு நியூஸ்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது கருத்துக்கு உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோரினார்.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் பிஆர்எஸ் சட்டமேலவை உறுப்பினரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரேசேகர் ராவின் மகளுமான கவிதா கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். ஏப்ரலில் இதே வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு கடந்த 27 அன்று உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது.

இதனிடையே கடந்த 27 அன்று செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பாஜக மற்றும் பிஆர்எஸ் இடையிலான உடன்பாட்டால் கவிதாவுக்குப் பிணை கிடைத்ததாகக் கூறினார்.

"2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக பிஆர்எஸ் உழைத்தது என்பது உண்மை. பிஆர்எஸ் மற்றும் பாஜக இடையிலான உடன்பாட்டால் கவிதாவுக்குப் பிணை கிடைத்ததாகவும் ஒரு பேச்சு உண்டு" என்றார் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.

இந்த நிலையில், வாக்குக்குப் பணம் கொடுத்ததாக ரேவந்த் ரெட்டிக்கு எதிரான வழக்கு விசாரணையை மத்தியப் பிரதேசத்துக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய், பிகே மிஷ்ரா மற்றும் கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரித்தது.

அப்போது அரசியல் கட்சியிடம் ஆலோசனை நடத்திவிட்ட பிறகுதான் நாங்கள் உத்தரவைப் பிறப்பிக்கிறோமா என்று நீதிபதி பிஆர் கவாய் கேள்வியெழுப்பினார். நீதிபதி விஸ்வநாதன் கூறுகையில், "முதல்வர் அலுவலகத்தில் இருக்கும் பொறுப்புள்ள ஒருவர் வெளியிடக்கூடிய கருத்தா இது? அரசியலமைப்பு நிறுவனங்களுக்கு பரஸ்பர மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை கடமை கிடையாதா?" என்றார்.

இதற்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தற்போது மன்னிப்புக் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"இந்திய நீதித் துறை மீது நான் மிகுந்த மரியாதையும் முழு நம்பிக்கையும் கொண்டுள்ளேன். 2024-ஆகஸ்ட் 29 அன்று பத்திரிகைகளில் வெளியான சில தகவல்கள், நீதித் துறையின் முடிவுகளை நான் கேள்விக்குள்ளாக்குவதாகத் தோன்றியிருக்கலாம்.

நீதித் துறை நடைமுறைகள் மீது நான் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறேன். பத்திரிகைகளில் வெளியான கருத்துகளுக்கு நான் நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகைகளில் வெளியான என்னுடையக் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன.

நீதித் துறை மற்றும் அதன் சுதந்திரத்தின் மீது அளவற்ற மதிப்பும், உயரிய மரியாதையும் கொண்டவன் நான். அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இதன் மதிப்புகள் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவனாக, நீதித் துறைக்கு எப்போதும் உயரிய மரியாதையை அளிப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார் ரேவந்த் ரெட்டி.