இந்தியா

மெகா கூட்டணிக்குள் குழப்பம் இல்லை: தேஜஸ்வி யாதவ் திட்டவட்டம் | Tejashwi Yadav |

அரசு ஒப்பந்த ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று வாக்குறுதி...

கிழக்கு நியூஸ்

ஆர்.ஜே.டி.யின் மெகா கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பிஹார் மாநில சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 அன்றும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11 அன்றும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகியவை பிரதானமாகக் களத்தில் உள்ளன. இதில் மெகா கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உட்பட பல்வேறு இழுபறி நீடிக்கிறது. இதனால் வேட்பாளர் பட்டியலையே வேட்புமனு தாக்கலின் கடைசி நாள் அன்றுதான் ஆர்.ஜே.டி. வெளியிட்டது.

இதையடுத்து தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவரங்களை ஆலோசனை செய்ய காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட்டை அவரது இல்லத்தில் இன்று ஆர்.ஜே.டி. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சந்திக்கவுள்ளார். அதன் பின் நாளை (அக்.23) மெகா கூட்டணி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நிகழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

“ஆர்.ஜே.டி. தலைமையிலான மெகா கூட்டணிக்குள் எந்தக் குழப்பும் இல்லை. அனைத்துக்குமான பதில்கள் நாளை தெரியும். அரசு துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் விரைவில் நிரந்தமாக்கப்படுவார்கள். இதுதான் ஆர்.ஜே.டி.யின் இரண்டாவது பெரிய அறிவிப்பு. அரசின் அனைத்து வேலைகளிலும் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்த ஊழியர்கள், இந்த அரசால் ஏமாற்றப்படுகிறார்கள். எந்தவிதக் காரணமும் இன்றி பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். ஒப்பந்த ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்யப்பட்டு அவர்களுக்கும் அரசு ஊழியர்கள் என்ற அங்கீகாரம் வழங்கப்படும். பிஹார் மாநிலத்திற்கு பொருளாதார நீதி தேவை. அதை மெகா கூட்டணி அரசு வழங்கும். கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டுவசதி போன்றவற்றை வழங்கும் பேட்டி (BETI) மற்றும் மா (MAA) திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அந்த பொருளாதார நீதி பாதுகாக்கப்படும்” என்றார்.