இந்தியா

ஆட்சியமைக்க உரிமை கோரினார் சந்திரபாபு நாயுடு

கிழக்கு நியூஸ்

ஆந்திரப் பிரதேச ஆளுநர் அப்துல் நசீரைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. மொத்தமுள்ள 175 இடங்களில் இந்தக் கூட்டணி 164 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், ஜனசேனா 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

விஜயவாடாவில் இன்று காலை தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏ-க்கள் கூட்டம் கூடியது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல்வர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக முன்மொழியப்பட்டார். அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல்வராக சந்திரபாபு நாயுடுவை முன்மொழிய ஜனசேனா கட்சி சார்பில் நான் ஒப்புதல் அளிக்கிறேன் என ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் அப்துல் நசீரைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு ஆட்சியமைக்க உரிமை கோரினார். பவன் கல்யாண் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் டகுபடி புரண்டேஸ்வரி உடன் சென்றார்கள். சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா நாளை நடைபெறுகிறது.