டாடா குழும தலைவர் சந்திரசேகரன் - கோப்புப்படம் ANI
இந்தியா

ஏர் இந்தியா விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ புதிய அறக்கட்டளை: டாடா தலைவர் அறிவிப்பு

அவசரமாக நாங்கள் எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிட முடியாது, விசாரணை முடியும் வரை காத்திருக்கவேண்டும்.

ராம் அப்பண்ணசாமி

ஏர் இந்தியா விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு `சாத்தியமான அனைத்து வழிகளிலும்’ உதவ டாடா குழுமம் ஒரு புதிய அறக்கட்டளையை உருவாக்கும் என்று டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

கடந்த வாரம் அஹமதாபாத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விபத்தில் பயணிகள், விமான நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் தரையில் இருந்த மக்கள் என 274 பேர் கொல்லப்பட்டனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலா ₹1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டாடா நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், டைம்ஸ் நவ் ஊடகத்துடனான ஒரு நேர்காணலில் பேசிய டாடா தலைவர் சந்திரசேகரன், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒரு ஊழியரை நியமிக்கும் திட்டத்தில் டாடா குழுமம் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

மேலும், `(பாதிக்கப்பட்ட) குடும்பங்களுக்கு உதவ AI171 அறக்கட்டளையை அமைப்பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம்’ என்றும் அவர் கூறினார்.

விமான பராமரிப்பு குறித்து நெறியாளர் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, பராமரிப்பில் எந்த சிக்கலும் இல்லை என்றும், ​​ஏர் இந்தியா பாதுகாப்பு தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்றும் சந்திரசேகரன் கூறினார்.

அத்துடன், `அவசரமாக நாங்கள் எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிட முடியாது, விசாரணை முடியும் வரை காத்திருக்கவேண்டும். 2022-ல் அரசாங்கத்திடமிருந்து விமான நிறுவனத்தை வாங்கியபோது எங்களிடம் 27 (போயிங்) ட்ரீம்லைனர்கள் இருந்தன, விஸ்தாரா இணைப்பு மூலம் 6-ஐ வாங்கினோம். ட்ரீம்லைனர்கள் குறித்து எந்த பிரச்னையும் இல்லை’ என்றார்.

கருப்புப் பெட்டி மற்றும் விமானிகளின் காக்பிட் குரல் பதிவு, விபத்து குறித்த தெளிவான கண்ணொட்டத்தை வழங்கும் என்று இந்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.

மேலும், விமான விபத்துக்குப் பிறகு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அனைத்து விமானங்களையும் கட்டாய சோதனைக்குள்ளாக்கி வருவதால் பல ஏர் இந்தியா விமானங்களை ரத்து செய்யப்பட்டதாகவும், ஈரான் வான்வெளி மூடப்பட்டதால் பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் சந்திரசேகரன் கூறினார்.