பட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் ராணா - கோப்புப்படம் ANI
இந்தியா

ராணாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு: உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

தனது குடும்பத்தாருடன் தொடர்புகொள்ள ராணா முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய புலனாய்வு முகமை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ராம் அப்பண்ணசாமி

2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ஹுசைன் ராணாவின் நீதிமன்ற காவலை ஜூலை 9 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2008 நவ.26-ல் தொடங்கி 4 நாள்கள் நடைபெற்ற மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணா, கடந்த ஏப்ரலில் அமெரிக்காவில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டார். தில்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ராணாவுக்கான நீதிமன்ற காவல் உத்தரவு நிறைவடையவுள்ள நிலையில், சிறையில் இருந்தபடி காணொளி வாயிலாக சிறப்பு நீதிபதி சந்தர் ஜித் சிங் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த விசாரணையின்போது ராணாவின் உடல்நிலை குறித்த கவலையை, அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எழுப்பினார். இதன் அடிப்படையில், அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை ஜூன் 9-க்குள் சமர்ப்பிக்க திஹார் சிறை நிர்வாகத்திற்கு சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார்.

தனது குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள ராணா முன்வைத்த கோரிக்கையை அதே தேதியில் நீதிமன்றம் பரிசீலிக்கவுள்ளது. முன்னதாக, தனது குடும்பத்தாருடன் தொடர்புகொள்ள ராணா முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய புலனாய்வு முகமை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மும்பை தீவிரவாத தாக்குதல் குறித்த விசாரணை தற்போது முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும், இதுபோன்ற உரையாடலின்போது பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அதிமுக்கியமான தகவல்களை அவர் தெரிவிக்கக்கூடும் என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

பாகிஸ்தானில் பிறந்த கனடா நாட்டு குடிமகனான 64 வயது தஹாவூர் ஹூசைன் ராணா, டேவிட் கோல்மேன் ஹெட்லியுடன் (தாவூத் கிலானி) இணைந்து 2008 மும்பை தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டார்.